சேலத்தில் அரசு பெண் மருத்துவர் ஒருவரை ஆபாச படம் எடுத்து வைத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவர் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் மீது கூறப்பட்ட புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் ஏற்காடு பிரதான சாலையில் உள்ள சுந்தர் கார்டனைச் சேர்ந்தவர் அங்கயற்கண்ணி (43). கோவை அரசு மருத்துவமனையில் கண் மருத்துவராக பணியாற்றுகிறார். இவருடைய கணவர் பாலாஜி. சென்னை எம்எம்சி மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக உள்ளார். இவர்களுக்கு 1999ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மருத்துவர் அங்கயற்கண்ணி கடந்த 2-6-2018ம் தேதி, தன் கணவர் பாலாஜி மற்றும் சேலம் அஸ்தம்பட்டி டிவிஎஸ் காலனியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி ஆகியோர் மீது, சேலம் அம்மாபேட்டை மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், அவர்கள் இருவரும் தன்னை ஆபாச படம் எடுத்து வைத்துக்கொண்டு, 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி வருவதாக தெரிவித்துள்ளார். ஆய்வாளர் சரோஜா, மருத்துவர் பாலாஜி, வழக்கறிஞர் பாலாஜி ஆகியோர் மீது பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டுவது, உயிருக்கு கொலைமிரட்டல் விடுப்பது மற்றும் பெண் கொடுமை உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
ஆனால் மருத்துவர் அங்கயற்கண்ணிக்கும், அவருடைய கணவருக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாகவே குடும்பத் தகராறு தொடர்ந்து வருகிறது. மனைவியையே ஆபாசப் படம் எடுத்து, வழக்கறிஞருடன் சேர்ந்து கொண்டு ஒரு மருத்துவரே மிரட்டும் இந்த சம்பவம், சேலத்தில் அரசு மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகார் குறித்து மருத்துவர் அங்கயற்கண்ணியிடம் நாம் பேசினோம்.
''நானும் என் கணவரும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் 1999ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு என் மீது தேவையற்ற சந்தேகம் இருந்து வந்தது. யாருடனாவது சகஜமாக பேசினால்கூட சந்தேகப்படுவார். அவருக்கு சில பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. அதை கேட்டதால், எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 2001ம் ஆண்டு, அவர் விவாகரத்துக் கேட்டு வழக்குக் தொடர்ந்தார். எங்கள் புகாரை ஏற்கனவே விசாரித்து வந்த அம்மாபேட்டை மகளிர் போலீசார், எங்களை சமாதானப்படுத்தி வைத்தனர். அதனால் அவர் விவாகரத்து வழக்கை திரும்பப் பெற்றார். பின்னர் நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தோம். மீண்டும் அவருக்கு சில பெண்களுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையெல்லாம் ஏன் என்று கேட்டதால், அவர் என்னை விவாகரத்து செய்ய திட்டமிட்டார். என் குழந்தைகளையும் என்னிடம் இருந்து பறித்துக் கொண்டார். அப்போது வழக்கறிஞர் பாலாஜி என்பவர் மூலமாக, பிரத்யேகமான செல்போன் செயலி (ஆப்) உதவியுடன் என் செல்போன் உரையாடலை கண்காணித்தார். என்னை ஆபாசமாக படம் எடுத்து வைத்துக்கொண்டு, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ஆகியவற்றில் வெளியிட்டு விடுவோம் என்று இருவரும் மிரட்டினர்.
விவாகரத்து மனுவை படித்துப் பார்க்காமல் கையெழுத்துப் போட வேண்டும். என் சொத்துகளை கணவர் பாலாஜிக்கு எழுதி வைக்க வேண்டும். இல்லாவிட்டால், குழந்தைகளை தோலை உரித்து கொலை செய்து விடுவோம் என்று வழக்கறிஞர் பாலாஜி மிரட்டினார். குழந்தைகளின் நலன் கருதி, அவர்களின மிரட்டலுக்கு பணிந்து போகும் சூழலுக்கு தள்ளப்பட்டேன். கடந்த 7-3-2017ம் தேதி, குழந்தைகளை என்னிடம் ஒப்படைப்பதாகக் கூறி, வழக்கறிஞர் பாலாஜி அவருடைய வீட்டுக்கு என்னைக் கூப்பிட்டார். அங்கு சென்றபோது, 10 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு ஏற்காடுக்கு, இரவு 11 மணிக்கு வந்து விடுமாறும், அங்கு நான் சொல்கிறபடி கேட்கவேண்டும் என்றும் கூறினார். ஏற்காடுக்கு வந்தால், என்னை ஆபாசமாக எடுத்து வைத்திருக்கும் படங்கள் கொண்ட ஹார்டு டிஸ்க், ஃபிளாப்பி ஆகியவற்றை கொடுத்து விடுவதாகக் கூறினார். அதற்குப் பிறகு பல முறை இரவு நேரங்களில் என்னிடம் செல்போனில் ஆபாசமாக பேசி வந்தார். என் குழந்தைகளுக்காக இத்தனையையும் பொறுத்துக் கொண்டேன். அவர்கள் இருவரும் இதுபோல் 6-1-2018ம் தேதி வரை எனக்கு டார்ச்சர் கொடுத்தனர்.
ஒவ்வொரு மாதமும் சம்பளத்தை வாங்கியதும் அவருடைய வங்கிக் கணக்குக்கு செலுத்தி வந்தேன். கிட்டத்தட்ட 67 லட்சம் ரூபாய்க்கு மேல் என் வருமானத்தை அவருக்குக் கொடுத்திருக்கிறேன். என் சொத்துகளையும் பறித்துக் கொண்டதோடு, தொடர்ந்து மனதளவில் டார்ச்சர் செய்து வந்தார். என் கணவரும், மாமனாரும் சேர்ந்தே ஒருமுறை என்னை தாக்கியுள்ளனர்,'' என்றார் மருத்துவர் அங்கயற்கண்ணி.
இந்த புகார் குறித்து அங்கயற்கண்ணியின் கணவர் மருத்துவர் பாலாஜியிடம் கேட்டபோது, ''முழுக்க முழுக்க அது ஒரு பொய் புகார். நீதிமன்றத்தில் சட்டப்படி நாங்கள் விவாகரத்து வாங்கி, ஒன்றரை வருடம் ஆகிவிட்டது. தாயிடம் பாதுகாப்பு இல்லாததால் தந்தையிடம் இருக்கலாம் என்று குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பும் நீதிமன்றம் என்னிடம் ஒப்படைத்து இருக்கிறது. அதன்படி குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு, அவங்கதான் வாழ்க்கைனு அமைதியாக வாழ்ந்துகொண்டு இருக்கேன். என்னமோ திடீரென்று, என்ன காழ்ப்புணர்ச்சியோ இப்படி புகார் கொடுத்திருக்காங்க. ஆச்சர்யமாகத்தான் இருக்கு,'' என்றார்.
அவரிடம், உங்களுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகச் சொல்கிறாரே? என்று கேட்டதற்கு, ''புகார் சொல்லணும்னா எப்படி வேணும்னாலும் சொல்லலாம். எனக்கும் வயது வந்த ஒரு பெண் இருக்கிறார். என் மகள், தாய்கூட வேண்டாம். தகப்பன்தான் வேணும்னு சொல்லிட்டு, என்கூட இருக்கும்போது நீங்களே அவரைப் பற்றி புரிஞ்சுக்குங்க. ஏற்கனவே அவர் இந்த மாதிரி ஒரு புகார் கொடுத்திருந்தாங்க. உதவி போலீஸ் கமிஷனர் அந்த புகார் குறித்து என்னிடமும், குழந்தைகளிடமும் விசாரித்து, அது பொய் புகார் என மூடிவிட்டார். அந்த ஃபைலே குளோஸ் ஆன நிலையில் மறுபடியும் புகார் கொடுத்திருக்கிறார். என்ன காரணம் எனத் தெரியவில்லை,'' என்றார் மருத்துவர் பாலாஜி.
மருத்துவர் அங்கயற்கண்ணி குற்றம் சாட்டியுள்ள மற்றொரு முக்கிய நபரான வழக்கறிஞர் பாலாஜியிடம் இதுபற்றி விசாரித்தோம். அவர் முதலில் நாம் 'நக்கீரன்' நிருபர்தானா என உறுதிப்படுத்த வேண்டுமே எனக்கேட்க, அலுவலக எண் கொடுத்து விசாரிக்கச் சொன்னோம். அவரும் அங்கு தொடர்பு கொண்டு உறுதிப் படுத்திக் கொண்ட பின்னர், நம்மை தொடர்பு கொண்டு விரிவாக பேசினார்.
''மருத்துவர் அங்கயற்கண்ணி, சில பேரிடம் தவறான வீடியோ சாட்டிங் செய்து கொண்டு இருந்தார். அதை அவருடைய மகள் பார்த்துவிட்டார். இதுபற்றி மகள், தந்தையிடம் சொன்னார். மருத்துவர் பாலாஜி, சென்னையில் உள்ள ஒரு தனியார் டிடெக்டிவ் ஏஜன்சி மூலம் அவருடைய சாட்டிங், எஸ்எம்எஸ் விவரங்களை கண்காணித்தார். இதற்கிடையே, அங்கயற்கண்ணி கடந்த 2016ல் கணவருடன் சண்டை போட்டுவிட்டு மேட்டூரில் தனியாக வாழ்ந்தார். ஒரு நாள் அங்கயற்கண்ணி குழந்தைகளை தூக்கிச்செல்வதற்கு முயன்றார். இது குறித்த தகராறில், மருத்துவர் பாலாஜி, அவருடைய தந்தை மருத்துவர் ஏழுமலை ஆகியோர் தன்னை தாக்கிவிட்டதாக புகார் அளித்தார். அதை விசாரித்த உதவி போலீஸ் கமிஷனர், அங்கயற்கண்ணி அளித்தது பொய் புகார் என அறிக்கை சமர்ப்பித்தார். இதற்கிடையே அங்கயற்கண்ணி சில ஆள்களைக் கூட்டிவந்து, மருத்துவர் பாலாஜியை தாக்கியுள்ளார். இது தொடர்பாக அங்கயற்கண்ணி உள்பட 8 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
இந்த நேரத்தில்தான் மருத்துவர் பாலாஜி என்னை முதன்முதலில் சந்தித்து, மனைவியை விவாகரத்து செய்வது தொடர்பாக சந்தித்தார். விவாகரத்து வழக்கில் மருத்துவர் பாலாஜியின் மகளை சாட்சியாக சேர்த்து இருந்தோம். கடந்த 14.3.2017ம் தேதி, இருவரும் நீதிமன்றம் மூலமாக சட்டப்படி விவாகரத்து பெற்று விட்டனர். குழந்தைகள் இருவரும் கணவரிடம் இருப்பதில் எந்த ஆட்சேபணையும் இல்லை என்று அவரே சொல்லியிருந்தார். விவாகரத்து வழக்கு முடிந்த இந்த ஒன்றரை வருடத்தில் அந்தம்மாவை நான் ஒருதடவைகூட பார்த்தது இல்லை. என் கிளைண்ட் இல்லாமல் தனியாக உங்களை சந்திக்க மாட்டேன் என்றும் சொல்லிவிட்டேன். இவங்களுக்கு நிறைய பேரோடு தப்பான தொடர்பு இருக்கு. அதை கோர்ட்டில் நிரூபித்து இருக்கிறோம். கோர்ட்டில் வழக்கு போட்டுவிட்டு யாராவது ஆபாச படம் எடுத்து மிரட்டுவார்களா? ஒரு பெண்ணாக அவரை அசிங்கபடுத்தக் கூடாது என்பதால்தான் அவர் சம்பந்தப்பட்ட ஆபாச ஆவணங்களை நீதிமன்ற பாதுகாப்பில் வைத்திருக்கிறோம்.
டிவிட்டர், ஃபேஸ்புக்கில் ஆபாச படங்களை வெளியிட்டு அசிங்கப்படுத்த வேண்டும் என்றால், ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடியே செய்திருப்போம். ஆனால் கண்ணியமாக நடந்து கொண்டோம். இந்நிலையில், 24&1&2018 அன்று என் மீதும், மருத்துவர் பாலாஜி மீதும் போலீசில் ஒரு புகார் அளித்தார். நாங்கள் அவரை ஆபாசப் படம் எடுத்து மிரட்டியதாக புகாரில் சொல்லியிருந்தார். இதுகுறித்து உதவி கமிஷனர் விசாரித்தார். அங்கயற்கண்ணி கொடுத்த புகார், முற்றிலும் தவறானது என்றும், அனுமானத்தின் பேரில் புகார் அளித்திருப்பதாக 3&3&2018ம் தேதியிட்ட விசாரணை அறிக்கையில் சொல்லி இருந்தார்.
கடந்த 1&6&2018ம் தேதி ஏற்கனவே எங்கள் மீது கொடுத்திருந்த அதே புகாரை மீண்டும் கொடுத்தார். இந்த புகாரை போலீசார் எப்படி பதிவு செய்தார்கள் என்பதே தெரியவில்லை. இதில் என்ன கூத்து என்றால், அவர் கொடுத்த பழைய புகாரில் நான் அவரை மிரட்டியதாக எதுவும் சொல்லப்படவில்லை. கடந்த 1ம் தேதி அளித்த புகாரில், 7&3&2017ல் நான் மிரட்டியதாக சொல்லியிருக்கிறார். 2017, மார்ச் மாதம் மிரட்டியதற்கு, ஒரு ஃபாரன்சிக் சயின்ஸ் டாக்டர், ஒன்றரை வருடம் கழித்து புகார் கொடுப்பாரா? இவங்க, 4&3&2017ம் தேதியன்று, எனக்கு குழந்தைகள் வேண்டாம். கணவர் பாதுகாப்பில் இருக்கலாம் என்று நீதிமன்றத்தில் சொல்லிவிட்டுப் போனார். அப்படி இருக்கும்போது, 7-3-2017ம் தேதியன்று, ஏற்காடுக்கு வந்தால் குழந்தைகளை ஒப்படைக்கிறேன் என்று நான் எப்படி சொல்லுவேன்?
பாரம்பரியமான அட்வகேட் குடும்பத்தில் இருந்து வந்திருக்கேன். இதுவரை என் மீது யாரும் குற்றம் சொன்னதில்லை. என்னை விடுங்கள். பாவம் மருத்துவர் பாலாஜி. விவாகரத்து ஆனதற்கு நான்தான் காரணம் என்று அங்கயற்கண்ணி கருதுகிறார். நான் தப்பு செய்ய நினைத்திருந்தால், இந்தம்மாவை நேரில் வரச்சொல்லி 'மிஸ்பிஹேவ்' செய்ய எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்? அது என் நோக்கம் அல்ல.
நான் எதற்காக அந்தம்மாகிட்ட 10 லட்சம் ரூபாய் கேட்கணும்? நீதிமன்றத்தில் போட்ட ஆவணங்களை தனியாக எடுத்து வைத்துக்கொண்டு மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை. அவரை யாரோ தப்பாக வழிநடத்துகின்றனர். அவர்களுக்கு விவாகரத்து 14-3-2017ம் தேதி கிடைத்து. அவரை நான் 7-3-2017ம் தேதி மிரட்டி இருந்தால் அதுவரை என்ன செய்து கொண்டிருந்தார்? சரி... 7-3-2017ம் தேதி அவரை நான் ஏற்காடுக்கு கூப்பிட்டிருந்தால், அதுபற்றி ஏன் அவர் உடனடியாக புகார் அளிக்கவில்லை?. ஏற்கனவே பொய் புகார் என போலீஸ் கமிஷனரே ஒப்புக்கொண்ட ஒரு புகாரின் மீது இப்போது எப்படி வழக்குப்பதிவு செய்ய முடியும்?
கடவுள் ஒருவர் இருக்கிறார். எனக்கும் ஒரு குழந்தை இருக்கு. நான் எந்த தப்பும் பண்ணவில்லை என்று வீட்டில் இருப்பவர்கள் புரிந்து கொண்டனர். மனசு வலிக்குது. அந்தம்மாவை ஒரு நாள்கூட தனியாக சந்தித்தது இல்லை,'' என்றார் வழக்கறிஞர் பாலாஜி.
இதுபற்றி சேலம் அம்மாபேட்டை மகளிர் காவல் ஆய்வாளர் சரோஜாவிடம் கேட்டபோது, ''மருத்துவர் அங்கயற்கண்ணி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை,'' என்றார்.