சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகும் புயல்களை பாதுகாப்பாக எதிர்கொண்டு வருகிறோம். புயலை எதிர்க்கொள்ள தேவையான வழிகாட்டுதல்களை முதல்வர் வழங்கியுள்ளார். புதிய புயலின் பாதையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். டிசம்பர் 4- ஆம் தேதி வரை மழை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, கோவா பகுதிகளில் தமிழக மீனவர்களின் படகுகள் கரை ஒதுங்க அனுமதி கோரப்பட்டுள்ளது. நீர் தேக்கங்கள், மழை நீர் தேங்கும் இடங்களை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் சென்று குளிப்பது, அருகில் செல்வது போன்ற நடவடிக்கைகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 'நிவர்' புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று மாலை தமிழகம் வரும் என எதிர்பார்க்கிறோம்." என்றார்.
இதனிடையே, புரவி புயல் எதிரொலி காரணமாக 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு நாகர்கோவில் சென்றது.