வங்கக்கடலில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னையிலிருந்து 770 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கு திசையிலும், காரைக்காலில் இருந்து 690 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கு திசையிலும் தற்போது நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை புயலாக வலுவடைந்து வட தமிழ்நாடு - புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி நகர்வதால் தமிழக கடலோரப் பகுதிகளில் டிசம்பர் 8 முதல் 10-ம் தேதி வரை மணிக்கு 50 கி.மீ முதல் 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையெடுத்து சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்படும் புயல் மற்றும் மழைச் சேதங்களை தவிர்க்கும் விதமாக பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அதற்கான சாதனங்கள் தயார் நிலையில் உள்ளன. தொடர்மழை காரணமாக கால்வாய்களில் ஏற்படும் உடைப்புகளை சரி செய்வதற்காக மணல் மூட்டைகளை சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் பேசுகையில், "இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட உள்ள பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாகவும்" தெரிவித்தார்.