
தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களின் கால்நடைகள், வல்லங்கள், கட்டுமரங்கள் என பல்வேறு இழப்பீடுகளுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்களுடன் நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதில், 4 மாவட்டங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் எவை என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த ஆலோசனையின் நிறைவில் 4 மாவட்டங்களில் எந்தெந்த பகுதி மக்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.