Skip to main content

ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்க சி.வி. சண்முகம் உயர் நீதிமன்றத்தில் மனு..! 

Published on 20/07/2021 | Edited on 20/07/2021

 

CV Shanmugam petitions in High Court to allocate funds for Jayalalithaa University ..!

 

முந்தைய அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்கக் கோரி முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

 

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மாணவர்கள் நலனுக்காக, வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரித்து, விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ‘டாக்டர். ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம்’ அமைக்கப்பட்டது.

 

இந்தப் பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்கக் கோரியும், பதிவாளரை நியமிக்கக் கோரியும், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

அந்த மனுவில், டாக்டர். ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கான துணைவேந்தர் நியமிக்கப்பட்டு, பல்கலைக்கழக கட்டுமானத்திற்காக விழுப்புரம் மாவட்டம், செம்மேடு கிராமத்தில் 70 ஏக்கர் நிலம் கடந்த அரசால் ஒதுக்கப்பட்டபோதும், தற்போதைய அரசின் புறக்கணிப்பால் பல்கலைக்கழகம் இன்னும் பழைய தாலுகா அலுவலகத்தில் செயல்படுவதாகவும், இன்னும் பல்கலைக்கழகத்திற்குப் பதிவாளரும், போதுமான பணியாளர்களும் நியமிக்கப்படாததால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அதன் முதுகலை மையத்தில், முதுகலை படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது சட்டத்தை மீறிய செயல் எனவும், அந்த அறிவுப்புக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

 

இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்