தமிழகத்தில் காவிரி கரையோர மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாகக் கொண்டாடுவது வழக்கம். கடந்த இரண்டு வருடங்களாக கரோனா தொற்று காரணமாக காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் கரூர் மாவட்டம், புகழூர் வட்டத்திற்கு உட்பட்ட தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் மேட்டூரில் திறந்து விடப்பட்டுள்ள அதிகப்படியான உபரி நீர் வெளியேறி வருவதால், வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக ஆற்றில் இறங்கி குளிப்பதற்கும், துவைப்பதற்கும் பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் தீயணைப்புத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
தீயணைப்புத் துறையினர் பாதுகாப்புடன் 20க்கும் குறைவான பொதுமக்கள் ஆற்றின் கரை ஓரத்தில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பழங்கள், கருகுமணி, மஞ்சள் கயிறு வைத்து வழிபாடு நடத்தி, தாங்கள் கொண்டு வந்த முளைப்பாரியை ஆற்றில் விட்டனர். ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கூடும் தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.