இந்திரா முகர்ஜி கொடுத்த வாக்கு மூலத்தை வைத்து கார்த்தி சிதம்பரத்தை கைது செய்துள்ளோம் என்று மோடியின் மத்திய புலனாய்வு துறையில் சொல்லியிருப்பது உலக மகா நகைச்சுவையாக இருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (எஸ்.சி.துறை) தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த நாட்டை கொள்ளையடித்து சூறையாடுபவர்கள் எல்லாம் நாட்டை விட்டு வெளியே உள்ளனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க முடியாத கையாளாகாத பிரதமர் மோடி. உயர்நீதிமன்ற அனுமதியுடன் வெளிநாட்டிற்கு சென்று தன் தாய் நாட்டிற்கு திரும்பிவந்தவரை, விசாரணைக்கு பலமுறை அவர் நேரில் சென்று ஆஜராகி இருந்தும் கூட, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று காரணம் கூறி, விமான நிலையத்தில் வைத்து கைது செய்தது மிகவும் வன்மையாக கண்டிக்கக்தக்கது.
இந்திரா முகர்ஜி கொடுத்த வாக்கு மூலத்தை வைத்து கைது செய்துள்ளோம் என்று மோடியின் மத்திய புலனாய்வு துறையில் சொல்லியிருப்பது உலக மகா நகைச்சுவையாக இருக்கிறது. 'இந்திரா முகர்ஜி தன் மகளை கொலை செய்தார் என்று கைது செய்து பினையில் இருக்கிறார், வழக்கை எதிர்கொண்டு இருக்கிறார். '
மேற்கூறிய இந்திரா முகர்ஜி எப்படிப்பட்ட ஒழுக்கமற்ற நேர்மையற்ற வாழ்க்கையை மேற்க்கொண்டார் என்று நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
பண மதிப்பிழப்பு ஆகட்டும், ஜி.எஸ்.டி வரி ஆகட்டும், நிதி நிலை அறிக்கை ஆகட்டும் ப.சிதம்பரம் அவர்கள் கேட்கும் எந்த ஒரு கேள்விக்கும் பதில் அளிக்க திராணியில்லாத அமைச்சர்களை வைத்து கொண்டு, இப்படி எவ்வளவு காலம் பழி வாங்க முடியும். அரசியல் உள் நோக்கத்துடன் செயல்பட்டுவரும் மத்திய பாஜக ஆட்சியை வன்மையாக கண்டிக்கிறோம்.
தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு பிறகு ஒரு குரல், சமூகநீதி குரலாக இருக்கிறது என்றால் அது ப.சிதம்பரம் அவர்களின் குரல் தான். மக்கள் நலனுக்காக குறிப்பாக ஏழை எளிய மக்களின் குரலாக ஒலித்து கொண்டிருக்கிறார்.
ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு எப்போதும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை உறுத்துணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.