அரசு இடங்களில் உள்ள மரங்களை வெட்டுவது சட்ட விரோதமானது எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டையிலிருந்து கௌரி என்பவர் மதுரை கிளையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு நிலங்களில் உள்ள மரங்களை உரிய அனுமதி இன்றி வெட்டி விற்பனை செய்வதாகவும், அவ்வாறு விற்பனை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு நிலங்களில் உள்ள மரங்களை உரிய அனுமதி இன்றி வெட்டினால் அதைச் சட்ட விரோதமாக கருதி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு, புயலின் போது சாய்ந்த மரங்களையும் மின் கம்பங்களின் மீது விழுந்த மரங்களையும் கிராமத்தினர் அனுமதி இன்றி வெட்டினர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மரங்களை வெட்டினால் கட்டாயம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.