புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை கிராமத்தில் உள்ள ஹால்ஸ் மது தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து உற்பத்தியாகும் மதுபாட்டில்கள் பெட்டி பெட்டியாக வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. வழக்கம்போல வெள்ளிக்கிழமை மாலையில் மதுபாட்டில் பெட்டிகள் ஏற்றப்பட்ட லாரியில் 3 தார்பாய்கள் போட்டு மூடி கயிறு கட்டப்பட்ட லாரி கந்தர்வக்கோட்டை கடந்து கோமாபுரம் அண்ணாநகர் வழியாக சென்றுகொண்டிருந்தது.
அப்போது லாரியிலிருந்து ஒரு பெட்டி மதுபாட்டில்கள் கீழே சாலையில் விழுந்து உடைந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் லாரியின் மேலே பார்த்தபோது ஒரு ஆள் மேலே நின்றிருக்கிறார். அதை லாரி ஓட்டுநரிடம் சொல்லி லாரியை நிறுத்துவதற்குள் மேலே இருந்த நபர் பின்னால் வந்து கொண்டிருந்த ஆம்னி காரில் குதித்து தப்பிச் சென்றுள்ளனர். கந்தர்வக்கோட்டை பகுதியிலிருந்தே லாரியைக் கண்காணித்துக் கொண்டு பின்னால் ஆம்னி காரில் வந்த நபர்களில் ஓடும் லாரியில் கயிறு கட்டி மேலே ஏறிய ஒரு நபர் தார்பாய்களை கத்தியால் கிழித்து மதுபாட்டில் பெட்டிகளை தூக்கி ஆம்னி காரில் போட்டுள்ளார். 5 பெட்டிகளைத் தூக்கி காரில் வீசியதில் ஒரு பெட்டி மட்டும் கீழே விழுந்து உடைந்ததால் தான் பொதுமக்கள் பார்த்துள்ளனர். ஓடும் லாரியில் மதுபாட்டில் பெட்டிகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அதே பகுதியை சே்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர் கூறுகையில், “கடந்த 15, 20 வருடங்களுக்கு முன்பு இதே போல சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு லாரிகளில் பொருள் ஏற்றிச் சென்றால் ஏதாவது மரங்களில் இருந்து லாரியில் குதித்து பார்சல்களை தூக்கி வீசிக்கொண்டே போவார்கள். அதே கும்பலைச் சேர்ந்த சிலர் பின்னால் எடுத்துக் கொண்டு வருவார்கள். பின்னால் வரும் வாகன ஓட்டுநர்கள் சொன்னால் தான் திருட்டு நடப்பதே தெரியும். அதேபோல சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் சொகுசு பேருந்துகளில் வெளிநாட்டில் இருந்து ஊருக்குச் செல்வோரின் பார்சல்கள் பஸ் மேலே உள்ள கேரியரில் ஏற்றி தார்பாய் போடப்பட்டிருக்கும். ஆனால், இது போன்ற திருடர்கள் பஸ் நிற்கும் இடங்களில் மறைவாக மேலே ஏறி படுத்துக்கொண்டே தார்பாய்களை அறுத்து பார்சல்களை திருடிச் சென்றுவிடுவார்கள். இப்படி பறிகொடுத்தவர்கள் ஏராளமானோர் ஏமாற்றத்தோடு வீடு போவார்கள். அதன் பிறகுதான் பஸ்ஸில் கீழேயே பார்சல் ஏற்றும்படியாக வசதி செய்துள்ளனர். ஆனால், மதுபாட்டில் திருட்டில் பழைய முறையிலேயே திருடி இருக்கிறார்கள்'' என்றார்.