கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த சின்ராஜ் நாமக்கல் எம்.பியாக இருந்து வருகிறார். இவர் நேற்று (11.7.2022) தனது கட்சியின் மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் மற்றும் நிர்வாகிகளுடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். எம்.பி சின்ராஜ் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்குவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
பொதுவாக திங்கள்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறும். இதையொட்டி பொதுமக்கள் அதிகளவில் கோரிக்கை மனுக்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவார்கள். இந்நிலையில், எம்பி ஒருவர் திடீரென்று தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த வளாகமே சிறிது நேரத்தில் பரபரப்பு அடைந்தது.
இது தொடர்பாக செய்தியாளர்கள் எம்.பி சின்ராஜிடம் கேட்டபோது, ''மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தர்ணாவில் ஈடுபட்டுள்ளேன். அதிகாரிகள் என்னுடைய கோரிக்கையை கண்டுகொள்ளாததால் இங்கு தர்ணாவில் அமர்ந்து இருக்கிறேன்,'' என்றார். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் ஜெகதீசன், வட்டாட்சியர் திருமுருகன் மற்றும் இதர துறை அலுவலர்கள் அங்கு வந்து, அலுவலகத்திற்கு வருமாறு கூறி, சமாதானம் செய்தனர். ஆனால் சின்ராஜ் எம்பி சமாதானம் ஆகவில்லை. மேலும், மாவட்ட ஆட்சியரிடம் மட்டும்தான் பேசுவேன் என்றி கூறி, அதிகாரிகளை திருப்பி அனுப்பி விட்டார்.
இதற்கிடையே, அலுவலகத்திற்கு வந்தார் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் எம்.பி சின்ராஜிடம் பேசி அவரிடமிருந்த கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். அப்போது எம்பி சின்ராஜ், தான் ஏற்கனவே கொடுத்த கோரிக்கை மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறினார். மாவட்ட ஆட்சியர் அழைத்த பிறகும், சின்ராஜ் எம்பி போராட்டத்தை கைவிடாமல் மீண்டும் தரையில் அமர்ந்து போராட்டத்தைத் தொடர்ந்தார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.