Skip to main content

''வ.உ.சியின் கனவை கொண்டது தற்போதைய அரசு''-மு.க.ஸ்டாலின் உரை! (படங்கள்)

Published on 15/08/2021 | Edited on 15/08/2021

 

 

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் அரசு அலுவலகங்களில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற இருக்கும் நிலையில், டெல்லியில் செங்கோட்டை பகுதிக்கு தேசியக்கொடி ஏற்றுவதற்காக இந்திய பிரதமர் மோடி வந்த நிலையில், மூவர்ண தேசியக் கொடியை ஏற்றும் முக்கிய நிகழ்வு நடைபெற்றது. அதன்பிறகு நாட்டு மக்களுக்கான தனது உரையை துவங்கினார் பிரதமர் மோடி.

 

இந்நிலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. திறந்தவெளி ஜீப்பில் கோட்டைக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை கொடுத்தனர். அதனை முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். அதனையடுத்து சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.

 

 '' The current government has the dream '' - MK Stalin's speech!

 

அதனைத் தொடர்ந்து சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''கோட்டையில் கொடியேற்ற வாய்ப்பளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. கல்லாலும் மண்ணாலும் உருவானதல்ல... சுதந்திரத்துக்காகப் போராடியவர்களின் ரத்தத்திலும் சதையிலும் எழுப்பப்பட்டது சுதந்திர தின நினைவு தூண். வேலுநாச்சியார், கட்டபொம்மன், தில்லையாடி வள்ளியம்மை, பெரியார் போன்ற ஏராளமான தியாகிகளின் மூச்சுக்காற்றால் கட்டப்பட்டது நினைவுத்தூண். சுதந்திர தினத்தில் முதல்வர்கள்தான் கொடியேற்ற வேண்டும் என்ற சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தவர் கலைஞர். இந்தியாவின் அனைத்து முதலமைச்சர்களுக்கும் கொடியேற்றும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்தவர் கலைஞர். மதுரை காந்தி அருங்காட்சியகம் 6 கோடியில் நவீன முறையில் புதுப்பிக்கப்படும். விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 18,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. சீனப் போரின் போது இந்திய நாட்டின் பாதுகாப்பிற்காக நிதி திரட்டி கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா. பாகிஸ்தான் போரின் போது இந்திய நாட்டிற்காக நிதி திரட்டி கொடுத்தவர் கலைஞர். கார்கில் போரின் போது மூன்று தவணைகளாக நிதி திரட்டிக் கொடுத்த அரசு கலைஞருடைய அரசு. விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம், தியாகிகளுக்கு நினைவில்லம் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுதேசி என்பது சிந்தனையாகமட்டுமின்றி செயலாக மாறவேண்டும் என்று நினைத்தவர் வ.உ.சி. தன்னிறைவு பெற்ற நாடாகத் திகழ வேண்டும் என்ற வ.உ.சியின் கனவை கொண்ட அரசாக தற்போதைய அரசு செயல்பட்டு வருகிறது. பல்வேறு நெருக்கடிகளுக்கு மக்களை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது கரோனா.

 

சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் 8 ஆயிரம் ரூபாயிலிருந்து 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். ஏற்றத்தாழ்வற்ற மனித உரிமை சமுதாயமாக நாம் மாற வேண்டும். நேர்மையுடன் தமிழ் நாட்டை உருவாக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் அனைவரும் மகாத்மா காந்திக்கு உறுதுணையாக இருந்தனர். சாதி, மதம், இனம் குறித்த சவாலை எதிர்கொண்டிருக்கும் நாட்டை வழிநடத்த கிடைத்த ஆயுதமே காந்திய சிந்தனை. மகாத்மா காந்தி தமிழர்கள் மீதும், தமிழ் மொழியின் மீதும் அளவற்ற அன்பு கொண்டிருந்தார். இந்தியாவிற்கு தமிழ் மொழி முக்கியம் என்றும், மற்ற மாநில மக்கள் தமிழ் மொழி பயில வேண்டும் என்றும் மகாத்மா கூறியிருந்தார். காந்திய சிந்தனைகளை இளைஞர்கள் மனதில் ஆழப் பதிய வைக்க சூளுரைப்போம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்