சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் தலைமை நீதிபதியை வரவேற்றும், புகழ்ந்தும் பேசினார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் பேசினார். அவர், “உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு வழக்கறிஞர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவார்கள்.” என்றார்.
சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கத்தின் துணைத் தலைவர் ஆர்.சுதா, ‘சென்னை ஐகோர்ட்டில் 55 நீதிபதிகள் உள்ளனர். இதில், பெண் நீதிபதிகள் வெறும் 9 பேர் தான். எனவே, காலியாக உள்ள 20 நீதிபதி இடங்களை நிரப்பும்போது பெண்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஐகோர்ட்டு வளாகத்தில் பன்அடுக்கு வாகன நிறுத்தம் உருவாக்கினால், வக்கீல்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். ஐகோர்ட்டு வளாகத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தியின் சிலையை நிறுவ வேண்டும்’ என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினார்.
வரவேற்புக்கு நன்றி தெரிவித்துப் பேசிய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி,
“தமிழகம், கலாச்சார ரீதியாக மேன்மை அடைந்த மாநிலமாகும். தெய்வப்புலவர் திருவள்ளுவர், முடிவில்லா கணிதத்தை தந்த ராமானுஜர் உள்ளிட்ட அறிஞர்கள் பிறந்த கலாச்சார பெருமை வாய்ந்த மண்ணில் தலைமை நீதிபதியாக பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு, நீதிபதிகள், வக்கீல்களின் பங்கு இன்றியமையாதது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஐகோர்ட்டில் நான் மேற்கொள்ளவிருக்கும் பணிக்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.