தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவிகளுக்கான கலைத்திருவிழா போட்டிகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று முதல் நாள் வரை திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசுப் பள்ளிகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
ஏற்கனவே பள்ளி அளவிலான போட்டிகள் நிறைவு பெற்று அதில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று முதல் ஒன்றிய அளவிலான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் அடுத்து மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறக்கூடிய அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.
இதில் 6 முதல் 8 வகுப்பு, 9 முதல் 10 வகுப்பு, 11 முதல் 12 வரை என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கவின் கலை, இசைக் கருவி, இசை, நடனம், நாடகம், மொழித்திறன், இசை சங்கமம் உள்ளிட்ட பல்வேறு பிரிவு போட்டிகளை அரசு நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட மணிகண்டம் ஒன்றியத்தைச் சேர்ந்த 11 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவ மாணவிகள் வெஸ்ட்ரி பள்ளி அரங்கில் நடைபெற்ற போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஒன்றிய அளவிலான இந்தப் போட்டிகளை தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அன்பரசன் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் இணைந்து சிறப்பாகத் திறமைகளை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளை மாவட்ட அளவிலான போட்டிகளுக்குத் தேர்வு செய்தனர்.