கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரத்திலுள்ள கடலூர் சாலையில் பாலக்கரையில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை பாலக்கரை பேருந்து நிறுத்தம், அம்மா உணவகம், அம்மா மருந்தகம், பள்ளிவாசல்கள், வங்கிகள், கோட்டாட்சியர் அலுவலகம், வணிக வளாகங்கள், தினசரி காய்கறி மார்க்கெட், அரசு மேல்நிலைப்பள்ளி, பெட்ரோல் பங்குகள் அமைந்துள்ளன.
இப்பகுதியில் 4 டாஸ்மாக் கடைகள் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இதனால் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரங்களில் மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு செல்கையில் சாலையிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு, மதுவை வாங்கி குடித்துவிட்டு வரும் வரை அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், சிலர் குடித்துவிட்டு மதுபோதையில் அப்பகுதி வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளை கேலி கிண்டலும் செய்து வருகின்றனர். மேலும் அடிக்கடி இப்பகுதியில் விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எப்போதும் அச்சத்தில் உள்ளனர்.
பொதுமக்கள் அதிக அளவு கூடும் பிரதான சாலையில் அடுத்தடுத்து 4 டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளதால் அந்த கடைகளை நகரத்திற்கு ஒதுக்குப்புறமான இடங்களுக்கு மாற்ற வேண்டும் அல்லது அங்கிருந்து கடைகளை முழுவதுமாக அகற்ற வேண்டும் எனக் கூறி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு பொதுநல அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து மனுக்கள் கொடுத்தும் இந்த கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் உள்ள மதுக்கடைகளை அகற்ற எல்லோரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், பாரத ஸ்டேட் வங்கி பேருந்து நிறுத்தம் அருகே அருகருகே அமைந்திருந்த இரண்டு டாஸ்மாக் கடைகளில் ஒரு டாஸ்மாக் கடையை அதே பகுதியில் மற்றொரு இடத்திற்கு மாற்றி திறந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விருத்தாசலம் நகர் மன்ற உறுப்பினரும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நகர செயலாளருமான பி.ஜி.சேகர் தலைமையில் மக்கள் அதிகாரம் முருகானந்தம், தமிழ் தேச மக்கள் முன்னணி ராஜேந்திரன், நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கதிர்காமன், ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோகுல கிறிஸ்டிபன், ராஜசேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிசாமி, த.வா.க நகர தலைவர் கந்தசாமி, மாவட்ட ஊடகப்பிரிவு ராம்பிரகாஷ், ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் இளஞ்சூரியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமாரை சந்தித்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் விருத்தாசலம் கடலூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் வங்கிகளுக்கு வரும் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. அதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அங்கிருந்து அகற்ற வேண்டும். இல்லை என்றால் விரைவில் சாலையில் அமர்ந்து மது குடிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.