Published on 01/05/2020 | Edited on 01/05/2020
காவேரி மேலாண்மை வாரியத்தை ஜல்சக்தி அமைப்புடன் இணக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை தன்னாட்சி பெற்ற அமைப்பாக இயங்க வேண்டும் எனவும், ஜல்சக்தி அமைப்புடன் இணைக்கக் கூடாது என வலியுறுத்தியும், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் விவசாய சங்கங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், “தமிழக விவசாயிகளின் பல்வேறு போராட்டங்களுக்கு பின்பு உச்சநீதிமன்றம் வாயிலாக காவிரி ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஜல்சக்தி அமைப்பின் கீழ் காவிரி மேலாண்மை வாரியம் செயல்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்று விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஜல்சக்தி அமைப்புடன் சேர்க்கப்பட்டால் மத்திய நீர்வளத்துறை அமைச்சராக கர்நாடகத்தை சேர்ந்த அமைச்சர் இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்படும் என்றும், அதனால் காவிரி மேலாண்மை வாரியம் தன்னாட்சி பெற்ற வாரியமாக செயல்படவேண்டும் என்றும், காவிரி மேலாண்மை வாரியத்துக்கு தலைவர் அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் சமூக இடைவெளியை பின்பற்றி, முக கவசங்கள் அணிந்து கொண்டு, கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவல் அறிந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் விநாயக முருகன் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ததையடுத்து கலைந்து சென்றனர்.