Skip to main content

உருமாற்ற கரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? - அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

new coronavirus strain chennai high court order india government


உருமாற்றம் பெற்ற கரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சீனாவில் கரோனா வைரஸ் பரவத் துவங்கியதை அடுத்து, 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த 27- ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் கரோனாவுக்கு ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 622 பேர்  பலியாகியுள்ளனர். தற்போது பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், உருமாற்றம் பெற்ற கரோனா பிரிட்டனில் பரவத் தொடங்கியுள்ளது. மிக வேகமாகவும், எளிதாகவும் பரவும் இந்த வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில், பிரிட்டனில் இருந்து வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் சீனாவில் இருந்து வரும் பயணிகள் மட்டும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட போதும், பிற நாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமும் கரோனா பரவியதால், பிரிட்டன் மட்டுமல்லாமல், அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் சோதனைக்கு உள்ளாக்கக் கோரி, திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். 

 

அதில், ‘உருமாற்றம் பெற்று பரவும் வைரஸ் மூலம், மேலும் கரோனா பரவ வாய்ப்புள்ளது. எனவே, வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த அனைவரையும் தனிமைப்படுத்தி, கரோனா சோதனைக்கு உட்படுத்த வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

 

இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, புதிய வகை கரோனா பரவல் காரணமாக, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அறிவித்துள்ளதாகவும், இந்தியா இன்னொரு ஊரடங்கை அறிவித்தால் மிக மோசமான நிலை ஏற்படும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், உருமாற்றம் பெற்ற கரோனா பரவலைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இந்தப் புதுவகை கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, வெளிநாட்டுப் பயணிகளை தனிமைப்படுத்துவது குறித்து நிபுணர் குழுவின் ஆலோசனைகளைப் பெற்று, அதன் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து, ஜனவரி 18-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்