இனிவரும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே சான்றிதழ் ஆயுட்காலச் செல்லுபடியாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இதற்கு முன்பு தேர்ச்சி பெற்றவர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
மத்திய அரசுக் கல்வி உரிமைச் சட்டம் 2009ல் கொண்டுவந்தபோது பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டது. அதில் ஆசிரியர் தகுதித்தேர்வும் ஒன்று. தமிழ்நாட்டில் 23.08.2010 முதல் ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. 2012 ஜூலை மாதம் முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்று வருகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றாலும் தேர்ச்சி சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் அதற்குள் வேலை கிடைக்காவிட்டால் தகுதிச்சான்றிதழ் காலாவதியாகும் என்று கால நிர்ணயம் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் 2012ல் சொற்ப எண்ணிக்கையில் தேர்ச்சிபெற்றவர்கள் அனைவரும் பணிநியமனம் செய்யப்பட்டார்கள். ஆனால் 2013ல் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் ஒரே அரசாணையில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்பட்டார்கள். அதில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், ஆசிரியர் பணி கிடைக்காமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள்.
இச்சூழலில் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழும் 7 ஆண்டுகள் முடியும் தறுவாயில் காலாவதியாகும் என்பதால் ஆசிரியர் பணி கனவாகிபோவது மட்டுமின்றி எதிர்காலமும் கேள்விக்குறியானது. இதனைத்தொடர்ந்து கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு நடத்தப்படும் NET, SLET போன்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சிப்பெற்றால் அச்சான்றிதழ் வாழ்நாள் சான்றிதழாக இருப்பது போன்று ஆசிரியர் தகுதித்தேர்வுக்கும் வேண்டுமென்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம், அரசியல் கட்சித்தலைவர்கள், பல்வேறு அமைப்புகள் நீண்டகாலமாக அரசுக்குக் கோரிக்கை வைத்துவந்தனர். இந்நிலையில், தற்போது அந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் NCTE-ன் தீர்மானம் 7ல் ஆசிரியர் தகுதித்தேர்வு TET தேர்ச்சி சான்றிதழ் 7 ஆண்டுகள் என்பதை ஆயுட்காலச் சான்றிதழாக அறிவித்துள்ளது.
ஆனால், இது ஆயுட்கால சான்றிதழ் இனி தேர்ச்சி பெறுபவர்களுக்குத்தான் என்பதையும் இதற்கு முன்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சட்ட நடவடிக்கை கருத்துகளை கேட்கப்பட்ட பிறகே உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன், “இது ஒருவகையில் சந்தோஷத்தைத் தருவதாக இருந்தாலும். NCTE தீர்மானம் 7ல் இனி வரும் காலத்திற்குதான் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்று ஆயுள்சான்று என்று குறிப்பிட்டிருப்பது ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்குச் சட்ட நடவடிக்கை கருத்துகள் கேட்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்பது வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. இதனால் நாடு முழுதும் டெட் தேர்வில் தேர்ச்சிபெற்ற லட்சக்கணக்கான ஆசிரியர்கள் மன உளைச்சலில் உள்ளார்கள். எனவே தேர்ச்சி சான்று அனைவருக்கும் பொருந்தும் என்று அறிவிக்க வேண்டுகிறேன். மேலும், ஆசிரியர் பணியினை பதிவு மூப்பு அடிப்படையில் வழங்க ஆவண செய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றோம்.” என்று தெரிவித்தார்.