Skip to main content

திருமணமான 4 நாட்களில் இளம்பெண்ணை ஏமாற்றிய கணவன்; மணக் கோலத்தில் கைது 

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

cuddalore two wheeler mechanic young women second marriage incident 

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள எல்.என்.புரத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் இருசக்கர வாகனங்களுக்கு பழுது பார்க்கும் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடையில் ஆர்.எஸ்.மணி நகரைச் சேர்ந்த சக்கரபாணி மகன் சுப்பிரமணியன் (வயது 31) என்பவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சுப்பிரமணியனுக்கும் ரவியின் மகள் ரம்யாவுக்கும் (வயது 29) இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இது காதலாக மாறியுள்ளது. ரம்யாவிடம் திருமணம் செய்து கொள்வதாக சுப்பிரமணியன் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து இருவரும் பல்வேறு இடங்களுக்குச் சென்று தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதனால் ரம்யா கருவுற்றார். இந்நிலையில் கருவை கலைக்குமாறு சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனால் ரம்யாவும் கருவை கலைத்ததாகச் சொல்லப்படுகிறது.

 

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம்  27 ஆம் தேதி சுப்பிரமணியனுக்கும் இளம்பெண் ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதனையறிந்த ரம்யா தன்னை ஏமாற்றிய சுப்பிரமணியன் மீது கடலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அப்போது சுப்பிரமணியன், புகாரை வாபஸ் பெற்றால் திருமணம் செய்து கொள்வதாக ரம்யாவிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதனை நம்பிய ரம்யா புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார். இந்நிலையில் இருவரும் கடந்த 22 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். அச்சமயம் சுப்பிரமணியனுக்கும் ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்டிருந்த பெண்ணுக்கும் நேற்று  திருமணம் நடைபெற இருப்பதாக நேற்று முன்தினம் ரம்யாவுக்கு தகவல் கிடைத்தது.

 

இதையடுத்து அவர் நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணியன் வீட்டின் முன்பு முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுபற்றி அறிந்த போலீசார் ரம்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுப்பிரமணியன் தன்னை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டார் என ரம்யா தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளார் எனத் தெரிவித்துள்ளார். எனவே இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என ரம்யா கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை மணக் கோலத்தில் இருந்த சுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்