Skip to main content

கரோனா! குணமாகாமல் வீட்டுக்கு அனுப்பப்பட்ட முதியவர் உயிரிழந்ததால் மக்கள் அச்சம்!

Published on 30/07/2020 | Edited on 30/07/2020
 corona

 

 

கடலூரை அடுத்த கோண்டூர் ஊராட்சிக்குட்பட்ட ஜோதி நகரைச் சேர்ந்த 63 வயது முதியவர் ஒருவர் சளி மற்றும் காய்ச்சலால் கடந்த 20-ஆம் தேதி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரிடமிருந்து உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. 

 

இதையடுத்து அவர் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. 

 

ஆனாலும் தொடர் சிகிச்சைக்கான வசதி இல்லாததால் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு அனுப்பட்டு அங்கும் போதுமான வசதிகள் இல்லாததால் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 24-ஆம் தேதி அங்கு சேர்க்கப்பட்ட அவருக்கு 26-ஆம் தேதி வரை அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். 28-ஆம் தேதி மாலையும் சற்று மூச்சுத்திணறல் இருந்த நிலையில், அவருக்கு கரோனா முழுமையாக குணமடைந்துவிட்டதாக கூறி மருத்துவர்கள் வீட்டுக்கு அனுப்பினர். அனுப்பும்போது வாகனம் கூட ஏற்பாடு செய்யாததால் மேல் மாடியிலிருந்து நடந்தே கீழே வந்து வாடகை வாகனம் மூலம் வீட்டுக்கு வந்துள்ளார். 

 

இந்நிலையில் வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் அவருக்கு மீண்டும் மூச்சு திணறல் அதிகமாக ஏற்பட்டதையடுத்து அவர் உயிரிழந்தார். அதன் பின்னர் அந்த முதியவரின் குடும்பத்தினர்கள் கடலூர் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முதியவர் பூரணமாக குணமடைவதற்கு முன்பு மருத்துவ மனையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டதால்தான் இறந்தாரா அல்லது அவரது இறப்பிற்கு வேறு காரணம் ஏதாவது உண்டா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

இதனிடையே 28-ஆம் தேதி இரவு உயிரிழந்தவரின் சடலம் 29-ஆம் தேதி காலை 10 மணி வரை பாதுகாப்பாக மூடி வைக்கவும் இல்லை, அடக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கவில்லை, பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவில்லை என புகார் கூறும் அப்பகுதி மக்கள் இதனால் தொற்று பரவும் என அச்சத்தில் இருப்பதாக கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்