கடலூர் மத்திய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சார்பில் மத்திய மாவட்டத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியிட்டவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி சிதம்பரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில். "கரோனா வைரஸ் சம்மந்தமாக நாடு முழுவதும் பெரும் பதட்டமும், அச்சமும் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இந்தியாவில் கடந்த 20 நாட்களாக 102 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக அரசு கூறியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக எடுத்து வருகிறது. ஆனால் முகக் கவசம் 50 பைசாவிற்கு விற்றது. ஆனால் இன்று ரூ 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே முகக்கவசம் மற்றும் கை அலம்பும் சோப்புகள் ரேஷன் கடைகளிலும் அரசு மருத்துவமனைகளிலும் வழங்க வேண்டும். கரோனா வைரஸ் ரத்தப்பரிசோதனை நிலையங்களை மாவட்ட அளவில் துவங்க வேண்டும்.
வைரஸ் குறித்து தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம். அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்களுக்கு விடுமுறைகளை அறிவிக்க வேண்டும். கச்சா எண்ணெய் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால் பெட்ரோல் விலை குறைக்கப்படவில்லை. கச்சா எண்ணெய் விலை குறைவு பயனை மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். அதேபோல் கைபேசிக்கு 18% ஜிஎஸ்டி வரி விதித்து இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சார்பில் கேரளாவை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளில் ரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடக்கும் போராட்டத்தின் பின்னணியில் காங்கிரஸ் கட்சி தான் இருக்கிறது.
இந்தியா முழுவதும் நடைபெறும் போராட்டங்களில் பின்னணியில் காங்கிரஸ் கட்சிக்குப் பங்கு இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் கூறுவது எதுவும் நடக்காது." இவ்வாறு யுவராஜ் கூறினார். கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகி அருணேஸ்வரன், வேல்முருகன், இளைஞரணி மாவட்ட தலைவர் ரஜினிகாந்த், மாவட்ட நிர்வாகி ராஜா சம்பத், குமராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பாலா உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.