கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் பொறியாளர் பட்டம் படித்த இளைஞர் பாலகுமார் (வயது 25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயதுடைய மாணவியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு மாணவியிடம் படிப்பதற்கு புத்தகம் தருமாறு கேட்டுள்ளார். மாணவி புத்தகத்தை தேடிப் பார்த்து எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது பொறியாளர் பாலகுமார், புத்தகத்தை தேடி எடுத்துக் கொண்டு வந்து தனது வீட்டில் கொடுத்துவிட்டு வருமாறு கூறியுள்ளார்.
இதனை நம்பிய மாணவி சிறிது நேரத்தில் புத்தகத்தை தேடி எடுத்துக்கொண்டு கொடுப்பதற்காக பாலகுமார் வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த பொறியாளர் பாலகுமார், மாணவி அவரது வீட்டுக்குள் சென்றதும் வீட்டுக் கதவை சாத்தி உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கத்தி கூச்சலிட்டுள்ளார் மாணவியின் குரல் வெளியே கேட்பதற்குள் பாலகுமார் திடீரென்று மாணவியின் கழுத்தில் அணிந்திருந்த துப்பட்டாவால் அவரது கையைக் கட்டி வாயைப் பொத்தி வீட்டுக்குள்ளே வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மாணவி, பொறியாளரின் கொடுமை தாங்க முடியாமல் கத்தி கூச்சல் போட முயல, அப்போது பாலகுமார் மாணவியின் கன்னத்தில் அறைந்துள்ளார். பிறகு மாணவியின் கட்டை அவிழ்த்து விட்டதும் அழுகையும் ஆத்திரமுமாக வீட்டுக்கு ஓடி வந்த மாணவி, நடந்த சம்பவம் குறித்து தனது பாட்டியிடம் கூறி கதறி அழுதுள்ளார். உடனே அந்த பாட்டி மாணவியை அழைத்துக்கொண்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ததோடு போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. உடனே மாணவி அளித்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்து பொறியாளர் பாலகுமாரை தேடி வருகிறார்கள். பத்தாம் வகுப்பு மாணவியை துப்பட்டாவால் கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்த பொறியாளரின் செயல் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.