மயிலாடுதுறையிலிருந்து மைசூருக்கு விரைவு ரயில் தினமும் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலைச் சிதம்பரம் வழியாகக் கடலூர் துறைமுகம் வரை இயக்க வேண்டும் எனச் சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கம், சிதம்பரம் வர்த்தக சங்கம், உள்ளிட்ட சிபிஎம் சிபிஐ விடுதலை சிறுத்தைகள் கட்சி காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி, சமூக அமைப்புகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதனையொட்டி ரயில்வே நிர்வாகம் ஜூலை 19-ஆம் தேதியிலிருந்து மைசூர் மயிலாடுதுறை விரைவு ரயில் கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்படும் என அறிவித்தது. இந்த ரயில் கடலூர் துறைமுகத்திலிருந்து வெள்ளிக்கிழமை மாலை சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்தபோது அனைத்து கட்சிகள் சார்பில் மலர் தூவி வரவேற்று கோஷங்களை எழுப்பினார்கள். இதில் ரயில் பயணிகள் சங்கம், சி.பி.எம், சிபிஐ, எஸ்.எப்.ஐ, வி.சி.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்..
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரயில் பயணிகள் சங்கத்தில் தலைவர் முகமது ரியாஸ், “சிதம்பரம் ரயில் நிலையத்தில் செங்கோட்டைக் கம்பன் உள்ளிட்ட ரயில்கள் நிற்காமல் செல்கிறது. இதனை உடனடியாக நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேபோல் கோயம்புத்தூர் வரை செல்லும் ஜன் சதாப்தி ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையும் உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் காலை நேரத்தில் திருச்சிக்குச் செல்வதற்கு ஏற்றார் போல் ரயிலை ஏற்க வேண்டும்” எனக் கூறினார்.