கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கார்குடல் கிராமத்தில் காணும் பொங்கலையொட்டி அக்கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பொங்கல் விளையாட்டுப் போட்டிகளை கண்டு களித்து கொண்டிருந்தனர்.
அப்போது முன்விரோதம் காரணமாக அக்கிராமத்தைச் சேர்ந்த சிவபூஷனம் மகன் சத்தியசீலன் என்பவரிடம் அதேபகுதியை சேர்ந்த முனுசாமி மகன் சுரேஷ்குமார் என்பவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்பு அங்கு இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு சுரேஷ்குமார் தனது உறவினர்களான செங்குட்டுவன், சுதர்சன், அபினேஷ் உள்ளிட்ட ஆறு பேர்கள் சென்று சத்தியசீலனை தேடியுள்ளனர். அப்போது அதே பகுதியில் உள்ள அவரது மாமியார் வீட்டில் இருந்ததை தெரிந்து கொண்ட அவர்கள் அங்கு சென்று அங்கிருந்த சத்தியசீலன் மற்றும் 7 மாத கர்ப்பிணியான அவருடைய மனைவி கிருஷ்ணவேணி ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணவேணி வயிற்றில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். மேலும் வயிற்று பகுதியிலிருந்து ரத்தம் அதிக அளவில் வெளியேறி கொண்டிருந்ததால் இதனைப் பார்த்து பதற்றம் அடைந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்ற நிலையில் 7 மாத கர்ப்பிணியை தாக்கி கொலை முயற்சி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி சத்தியசீலனின் உறவினர்கள் விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து முற்றிலும் பாதித்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாச்சலம் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.