வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே சைனகுண்டா என்கிற கிராமத்தோடு தமிழக எல்லை முடிந்து ஆந்திரா எல்லை தொடங்குகிறது. இந்த சாலை வழியாக ஆந்திரா மாநிலம் குப்பம் நகருக்குள் நுழைந்து சித்தூர், திருப்பதி என ஆந்திரா மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் பயணிக்கலாம்.
கொங்கு மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட வழியாக வரும் வாகனங்கள் இந்த சாலையை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். தற்போது 144 தடை உத்தரவுக்கு பிறகும் இந்த சாலை பிஸியாகவே இருந்தன. இந்த சாலையின் சோதனை சாவடியில் இரு மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் சுகாதாரதுறையினர் வாகனங்களில் வரும் நபர்களை பரிசோதனைக்கு பின்பே அனுப்பி வைத்து வந்தனர்.
இந்நிலையில் காட்பாடி வழியாக ஆந்திரா மாநிலம் செல்லம்- சித்தூர் சாலையில் கெடுபிடிகள் அதிகம் என்பதால் வாகன ஓட்டிகள் சைனகுண்டா வழி சாலையை அதிகம் பயன்படுத்த துவங்கினர். அதேபோல் ஆந்திரா மாநிலம் எல்லையோர பகுதியில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள், ஆயிரக்கணக்கான மக்கள் தமிழக எல்லைக்குள் வந்து தங்களுக்கானப் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனைத் தடுக்க முடியாமல் தவித்தனர் வேலூர் மாவட்ட அதிகாரிகள்.
இந்த பிரச்சனைக்கு தீர்வுக்கான அதிரடியாக ஒரு முடிவெடுத்தனர். அதன்படி அந்த முக்கிய சாலையை மறித்து ஹாலோ பிரிக்ஸ் கற்களை வைத்து 5 அடி உயரத்துக்கு சுவர் எழுப்பி சாலையை முற்றிலும் அடைத்துவிட்டனர். இதனால் பெரிய வாகனங்கள் மட்டுமல்லாமல் இருசக்கர வாகனங்கள் கூட சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகசுந்தரத்தின் அதிரடியான இந்த செயல்பாட்டைக் கண்டு இரு பகுதி மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுப்பற்றி அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, வேலூர் மாவட்டம் ரெட் அலர்ட் பகுதியாக உள்ளது. மாநில எல்லை மாவட்டமாகவும் உள்ளது. ஆந்திராவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இந்த மாவட்டத்துக்கு வருகிறார்கள். சித்தூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகம். இங்கு வருபவர்கள் இன்னும் கரோனாவை பரப்பிவிட்டு போய்விட்டால் இன்னும் பாதிப்பு அதிகமாகும். இந்த சாலையில் தான் கட்டுக்கடங்காமல் போகிறார்கள், வருகிறார்கள். அதனால் தான் இப்படியொரு சுவரை கட்ட உத்தரவிட்டார் என்கிறார்கள்.