கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பால்ராஜ் (80) என்பவர் அழுதபடியே இருந்துள்ளார். அப்போது கண்காணிப்பாளர் ராஜாராம் ஏன் அழுகிறீர்கள்? எந்த ஊர்; என்ன விவரம் என்று பறிவோடு கேட்டுள்ளார். பெரியவர் பால்ராஜ் தனது சொந்த ஊர் ஆனைகுப்பம் எனக்கு ஒரு மகன் ஒரு மகன் உள்ளனர். அவர்கள் வயதான காலத்தில் எனக்கு சாப்பிட உதவி செய்வதில்லை. பணமும் கொடுப்பதில்லை என்று கூறி கண் கலங்கியுள்ளார்.
அதோடு அன்று காலை மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்க வெறும் வயிற்று பசியோடு வந்துள்ளார். இதை அறிந்து மனம் கலங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரியவர் பால்ராஜை அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே பெரியவரை அமர வைத்து தனது சொந்த செலவில் உணவுகளை வாங்கி கொடுத்து சாப்பிட வைத்தார். பெரியவர் பால்ராஜ் சாப்பிடும்போது எஸ்.பி எதிரில் அமர்ந்து கனிவுடன் அவரை பார்த்துக் ,கொண்டிருந்தார் கண்காணிப்பாளர்.
சாப்பிட்டு முடித்ததும் அவருக்கு ஆறுதல் கூறிய எஸ்.பி தங்கள் மனு மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அப்போது ராமாபுரத்தைச் சேர்ந்த 71 வயது ரங்கையைன் என்பவர் தனக்கு வரும் பென்ஷன் பணத்தை தனக்கு நெருங்கிய ஒருவர் வாங்கிக் கொண்டு தர மறுத்து மிரட்டி வருவதாக கூறியுள்ளார். அவரைப் பற்றி விசாரித்த எஸ்.பி ராஜாராம் ரங்கையனுக்கு டீ வாங்கிக் கொடுத்து அவர் புகாரை வாங்கி படித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அந்த இரு பெரியவர்களையும் அனுப்பி வைத்துள்ளார்.
காவல்துறை அதிகாரிகள் எப்போதும் மிடுக்காக காட்சியளிப்பார்கள். பேச்சிலும் ஒரு கராத்தன்மை இருக்கும். இதைத்தான் எங்கள் காலத்தில் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த அதிகாரி மிகவும் மென்மையாக பேசி எங்கள் குடும்பத்து பிள்ளைகளை போல எங்களிடம் அன்பு காட்டி, உணவு வாங்கிக் கொடுத்து, எங்கள் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியது மிகவும் தெம்பாக உள்ளது. எங்களைப் போன்ற வயதானவர்களுக்கு இவரைப் போன்ற மனிதாபமான மிக்க அதிகாரிகள் இன்னும் அதிக அளவில் உருவாகி உதவி புரிய வேண்டும் என்கிறார்கள் முதியவர்களான பால்ராஜ், ரங்கையன் ஆகியோர்.