![cuddalore panchayat meeting](http://image.nakkheeran.in/cdn/farfuture/n3oX2qtr-hvPIT9Gv9032SgcTtGJ4YvBpxodDYwzu10/1610532552/sites/default/files/inline-images/cuddalore-600x-400.jpg)
கடலூர் மாவட்டம், கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமின் திட்ட அலுவலர் ராஜகோபால் அவர்களிடம் புகார் மனு வழங்கியுள்ளனர்.
இந்தக் கூட்டமைப்பின் தலைவர் சுகுமாரன் தலைமையில் ஊராட்சித் தலைவர்கள் மருதநாடு சுரேஷ் (காரணப்பட்டு), தமிழரசி பிரகாஷ் (புதுக்கடை), கனகராஜ் (வரக்கால்பட்டு) மனோகர் மற்றும் ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன், சரஸ்வதி, செல்வராஜ், வெங்கடேஸ்வரி உள்ளிட்ட பலரும் கூட்டாக சென்று மனு அளித்துள்ளனர்.
மனுவில், ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு உரிய அதிகாரம் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்றும் ஊராட்சி தேர்தல் நடைபெற்று ஓராண்டு முடிந்துவிட்ட நிலையிலும், ஊராட்சிகளுக்குத் தேவையான நிதி இன்றுவரை ஒதுக்கப்படவில்லை மற்றும் கிராம ஊராட்சிகளில் ஏற்கனவே செய்த ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணிகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை.
சிறப்பு அதிகாரிகளின் செயல்பாடுகளின் காலகட்டத்தில் ஒதுக்கப்பட்ட புதிய சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஊராட்சி தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பசுமை வீடு உட்பட ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்படும் அரசு திட்டப் பணிகளை ஊராட்சி தலைவர்கள் மூலம் செயல்படுத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.’
இப்படி பல்வேறு கோரிக்கைள் அடங்கிய மனுவை ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு வழங்கியுள்ளது. ஊராட்சிகளுக்கு அதிக அதிகாரமும் போதிய நிதியும் ஒதுக்கீடு செய்யுமாறு தமிழகம் முழுவதும் இதே போன்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பலமாவட்டங்களில் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு சார்பில், அதன் தலைவர்கள் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் கோரிக்கை மனுக்கள் அளித்து நடத்தி வருகிறார்கள்.
தமிழக அரசு இவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மெத்தனம் காட்டி வருவதாக ஊராட்சி மன்றத் தலைவர்கள் தரப்பில் கூறுகின்றனர். கிராம மக்களுக்குத் தேவையான அடிப்படை தேவைகளை நேரடியாக மக்களைச் சந்தித்து நிறைவேற்றக் கூடியவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள்தான், ஆனால் அவர்களுக்கு உரிய அதிகாரம் வழங்குவதற்கும் போதிய நிதி ஒதுக்காமலும் தமிழக அரசு தயக்கம் காட்டி வருகிறது ஏன்? என்று கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.