கடலூர் மாவட்டம் நெய்வேலி 20 ஆவது வட்டத்தில் வசித்து வந்தவர் கண்ணன். இவர் நெய்வேலி சூப்பர் பஜாரில் பிரியாணி கடை நடத்தி வந்துள்ளார். இவர் கடந்த 26 ஆம் தேதி இரவு அவரது கடையிலிருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது நெய்வேலி நீதிமன்ற வளாகம் எதிரே உள்ள காலி இடத்திலிருந்து மர்ம நபர்கள் கண்ணன் மீது கற்களை வீசித் தாக்கியுள்ளனர். அவர் இரு சக்கர வாகனத்தை நிறுத்திப் பார்ப்பதற்குள் கண்ணனை சரமாரியாகக் கத்தியால் வெட்டி முகத்தைச் சிதைத்து விட்டுத் தப்பி ஓடி உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெய்வேலி தெர்மல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி காப்பான் குளம் கிராமத்தைச் சேர்ந்த இருவர் இவரது ஓட்டலுக்கு வந்து பிரியாணியை கடனாகக் கேட்டுத் தகராறு செய்துள்ளனர். அப்போது கடையின் உரிமையாளர் கண்ணன் ஏற்கனவே பிரியாணி வாங்கிய பணத்தை கொடுங்கள் எனக் கேட்டுள்ளார். இதனால் இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சிறிது நேரம் சென்ற பிறகு இரண்டு பேரும் வந்து கண்ணனை கத்தியால் வெட்டியுள்ளனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் அப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதே சமயம் 26 ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் கண்ணனை கத்தியால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்து விட்டுத் தப்பி ஓடிய சம்பவம் மேற்கண்ட இரண்டு நபர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், இது சம்பந்தமாக 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். நெய்வேலியில் நடைபெற்ற படுகொலை சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் பிரியாணி கடை உரிமையாளர் கண்ணன் கொலை வழக்கில், சரியான முறையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்காத தெர்மல் காவல் ஆய்வாளர் லதாவை சஸ்பெண்ட் செய்து, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். பிரியாணி கடை உரிமையாளர் கண்ணன் கொல்லப்படுவார் என தகவல் கிடைத்த பிறகும், காவல் ஆய்வாளர் லதா உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.