காட்டுமன்னார்குடி வட்டம் சிறுகாட்டூர் எய்யலூர் சாலையை சீரமைப்பதாகக் கூறி, அதற்கான பணிகளை அதிகாரிகள் தொடங்கிய போதிலும், பாதியிலேயே பணிகள் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 3 வருடமாக குண்டும், குழியுமாக உள்ள இந்த சாலையில் போக்குவரத்தை துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையை சரி செய்து போக்குவரத்தை தொடங்க வலியுறுத்தி பல முறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வியாழன் காலை சிறுகாட்டூர் பகுதியில் இறந்த உடலுக்கு மலர் வளையம் வைப்பது போன்றும், ஈமச்சடங்கு செய்தும் நூதன போராட்டம் செய்தனர். போராட்டத்திற்கு இந்திய விவசாய தொழிலாளர் சங்க வட்ட துணைத் தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் முன்னிலை வகித்தார் . இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட துணை செயலாளர் ஜெயக்குமார், வட்ட நிர்வாகிகள் அரசன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் பாபு நேரடியாக வந்து போராட்டத்தில், ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலையை சீரமைக்கவம், மீண்டும் இந்த சாலை வழியே போக்குவரத்தை தொடங்கும் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதன் தொடர்ச்சியாக சாலைகள் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.