கடலூர் கே.என்.பேட்டை திருப்பதி நகரில் உள்ள ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கடலூர் டிஎஸ்பி சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் டிஎஸ்பி சாந்தி தலைமையில் திருப்பாப்புலியூர் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சுகந்தன் வட்டார அலுவலர் ஏழுமலை மற்றும் அதிகாரிகள் திருப்பதி நகரில் உள்ள அந்த வீட்டுக்கு சென்றனர். அப்போது அந்த வீடு பூட்டிக் கிடந்தது. வீட்டின் பூட்டை உடைத்து திறந்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டில் இருந்த அனைத்து அறைகளிலும் அரசால் தடை செய்யப்பட்ட ஏழு வகையான புகையிலை பொருட்கள் நூற்றுக்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகளில் இருந்தது கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து 10 டன் எடையுள்ள அந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவற்றின் மதிப்பு சுமார் ஒன்றரை கோடி இருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பாப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கிவைத்தவர் யார் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது எந்தெந்த கடைகளில் எல்லாம் விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருட்கள் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் தொடர் விசாரணையில் கடலூரைச் சேர்ந்த 32 வயது வாலிபர் ஒருவர் திருப்பாப்புலியூரில் மளிகைக் கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டு புகையிலைப் பொருட் களையும் மாவட்டம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வருவது தெரியவந்துள்ளது. அவர் மீது ஏற்கனவே மூன்று வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே அந்த வாலிபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அந்த வாலிபரை தேடி வருகின்றனர்
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிநவ், புகையிலை பதுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த வீட்டை நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடலூர் மாவட்டத்தில் அவ்வப்போது பறிமுதல் செய்யப்படுகின்றன. மேலும் இதை விற்பனை செய்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்படியிருந்தும் போதை புகையிலை விற்பனை மாவட்டத்தில் தொடர்கின்றது.