நடிகர் ரஜினிகாந்தை பாமக தலைவர் அன்புமணியின் மகள் திரைப்பட பிரமோஷன் தொடர்பாக சந்தித்திருந்தார். இந்நிலையில் 'வாழ்க்கை ஒரு வட்டம்' என காங்கிரஸ் நிர்வாகி வாழப்பாடி ராம சுகந்தன் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணியின் மகள் சங்கமித்ரா நடிகர் ரஜினிகாந்தை அவருடைய போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார். சங்கமித்ரா தயாரித்துள்ள 'அலங்கு' என்ற திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் அவருக்கு காட்டப்பட்டது. படக்குழுவினரை ரஜினிகாந்த் பாராட்டினார். அதனைத் தொடர்ந்து 'அலங்கு' திரைப்படத்தின் ரிலீஸ் போஸ்டரையும் ரஜினி அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து இப்படத்தை ரஜினிகாந்த் வெளியிட வேண்டும் என சங்கமித்ரா ரஜினியிடம் கோரிக்கை வைத்து அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான வாழப்பாடி ராமசுகந்தன் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். முன்னதாக 'பாபா' திரைப்படம் வெளியான நேரத்தில் படத்தில் ரஜினி புகைப்பிடிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பல இடங்களில் 'பாபா' படம் வெளியான தியேட்டர்கள் சூறையாடப்பட்டு. அது தொடர்பான செய்திகள் நாளிதழ்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை குறிப்பிட்டுள்ள வாழப்பாடி ராமசுகந்தன் 'ரஜினி படத்திற்கு ஒரு காலத்தில் எதிர்ப்பு தெரிவித்த பாமகவினர் தற்பொழுது ரஜினியை சந்தித்து படத்தை வெளியிட அழைப்பு விடுத்துள்ளனர். வாழ்க்கை ஒரு வட்டம்' என அதில் குறிப்பிட்டுள்ளார்.