திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மைக்கா மேடு பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி. 38 வயதான இவர் சில தினங்களுக்கு முன்பு அசோக் லேலண்ட் போஸ் லாரியை புதிதாக வாங்கி இன்று ரிஜிஸ்ட்ரேஷன் செய்யச் சென்றுள்ளார். அப்போது கிருஷ்ணகிரி மேம்பாலம் செல்லும் சாலையில் லாரி ஓட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.
அப்போது கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மகள் லித்திகா (20) இவர் திருப்பத்தூரில் ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் தன்னுடைய டிஸ்கவர் இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூர் செல்ல கிருஷ்ணகிரி மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிரே ஆட்டோ வந்ததன் காரணமாக திடீரென நிலைதடுமாறி போஸ் லாரியின் பின்புறத்தில் கீழே விழுந்தார். இதனால் லாரியின் பின் சக்கரம் லித்திகாவின் தலையின் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். உயிரிழந்த லித்திகாவின் உடலைப் பார்த்து உறவினர்கள் கத்தி கதறி அழுதனர்.
விபத்து குறித்து அறிந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
லித்திகாவின் தந்தை திமுகவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவராகவும் இருந்தவர். லித்திகாவின் அண்ணன் மோகன், தற்போது திமுக கந்திலி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய சென்ற புதிய வண்டியில் விபத்து ஏற்பட்டு பெண்ணின் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.