வடிவேலு, சிங்கமுத்து இருவரும் இணைந்து முன்பு பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்கள் மனதைக் கவர்ந்திழுத்தார்கள். இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து மாறுபாட்டின் காரணங்களால் இருவரும் ஒன்றாகத் திரையில் தோன்றுவதில்லை. முன்னதாக இருவருக்கும் இடையே நிலம் தொடர்பான வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கும் நிலையில், வடிவேலு கடந்த ஆகஸ்ட் மாதம் சிங்கமுத்து மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தன்னை பற்றி சிங்கமுத்து யூடியூப்-ல் தரக்குறைவாகப் பேசியதால் ரூ.5 கோடியை நஷ்டஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் இனிவரும் காலங்களில் சிங்கமுத்து தன்னை பற்றி அவதூறு பரப்பத் தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிங்கமுத்து இரண்டு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். பின்பு நடந்த விசாரணையில் சிங்கமுத்து இனிமேல் வடிவேலு குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க மாட்டேன் என உத்தரவாத மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் வடிவேலு பற்றிப் ஏற்கனவே பேசியிருந்த வீடியோக்களை யூடியூப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் தீர்பளித்தார்.
இந்த நிலையில் நீதிபதியின் உத்தரவின்படி சிங்கமுத்து சென்னை உயர்நீதி மன்றத்தில் உத்தரவாத மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே நிலம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அது முடியும் வரை வாய்மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ, டிஜிட்டல் முறையிலோ தவறான எந்த தகவலையும் தெரிவிக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கின் விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.