கோவை குனியமுத்தூர் அருகே உடல் நலக்குறைவால் அரசு பேருந்தை நிறுத்திய ஓட்டுநரிடம், மது போதை என எண்ணி பயணிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை உக்கடத்திலிருந்து வாளையார் வரை செல்லும் 96 அரசு பேருந்து நேற்று இரவு 8.30 மணியளவில் உக்கடத்தில் இருந்து கிளம்பியது. அப்போது பேருந்தை பாலசுப்பிரமணி (43) என்பவர் ஓட்டி வந்தார். பேருந்து குனியமுத்தூர் அருகே வரும் போது ஓட்டுநருக்கு திடிரென உடல் நல குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதை உணர்ந்த ஓட்டுநர் பாலசுப்பிரமணி பேருந்தை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு பயணிகளை இறங்க கூறியுள்ளார்.
ஆனால் பாலசுப்பிரமணியின் நடவடிக்கைகளை கண்ட பயணிகள் அவர் மது போதையில் இருப்பதாக எண்ணி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பொதுமக்களும் அதிகளவு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நிகழ்விடத்திற்கு வந்த குனியமுத்தூர் போலீஸார் பாலசுப்பிரமணியை சோதனை செய்தனர். அப்போது ஓட்டுநர் மது அருந்தவில்லை என்பதும், குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டால் மயக்கமடையும் நிலையில் இருப்பதும் தெரியவந்தது.
அதன் பின் அவ்வழியாக வந்த சக அரசு பேருந்து ஓட்டுநர்கள் பாலசுப்பிரமணியத்தை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். உடல் நலக்குறைவு ஏற்பட்டவுடன் பேருந்தை இயக்காமல் சாதுர்யமாக பேருந்தை நிறுத்தி பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநருக்கு பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.