ஜெனரேட்டருக்கு டீசல் அடித்ததில் ஊழல் முறைகேடுகள் நடந்த புகாரின்பேரில், ஓய்வு பெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்னதாக சேலம் மாநகராட்சி செயற்பொறியாளர் திடீரென்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சேலம் மாநகராட்சியில் செயற்பொறியாளராக பணியாற்றி வந்தவர் காமராஜ் (58). கடந்த சில மாதங்களாக ஸ்மார்ட் சிட்டி திட்ட பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். இவர், கடந்த 2010ம் ஆண்டு தஞ்சாவூர் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு பணியாற்றிய காலக்கட்டத்தில், திருமானூர் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமாக பொருத்தப்பட்டிருந்த ஜெனரேட்டருக்கு டீசல் வாங்கியதில், ஊழல் நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறைக்கு புகார்கள் சென்றன.
இதுகுறித்து விசாரணை நடத்தியதில், 17 லட்சம் ரூபாய் வரை முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதற்கு உரிய கணக்கு ஆவணங்கள் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை என்பதும் தெரிய வந்தது. 2011&2012, 2012&2013, 2013&2014 ஆகிய மூன்று நிதியாண்டுகளில் இந்த முறைகேடு நடந்திருப்பதை லஞ்ச ஒழிப்புப்பிரிவினர் கண்டுபிடித்தனர்.
இந்த முறைகேட்டில், தற்போதைய தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக உள்ள ஜானகி மற்றும் இரண்டு ஆணையர்கள் மட்டுமின்றி அங்கு செயற்பொறியாளர்களாக பணியாற்றி வந்த கருணாகரன், போஸ், சீனிவாசன் உள்ளிட்ட 10 அதிகாரிகள் மீதும் இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவர்களில் சீனிவாசன் என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். கருணாகரன், போஸ் ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டனர்.
இந்நிலையில், சேலம் மாநகராட்சி செயற்பொறியாளர் காமராஜ், 58 வயது நிறைவடைந்து மார்ச் 31ம் தேதியுடன் (நாளை) ஓய்வு பெற உள்ள நிலையில், அவரை திடீரென்று பணியிடைநீக்கம் செய்து, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச்செயலர் ஹர்மந்தர்சிங் உத்தரவிட்டுள்ளார். இது, மாநகராட்சி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து காமராஜிடம் கேட்டபோது, ''தஞ்சாவூருக்கு இடமாறுதல் சென்ற பிறகு அங்கிருந்து 2011 ஆகஸ்ட் மாதம் மீண்டும் சேலம் மாநகராட்சிக்கு இடமாறுதல் ஆகி வந்துவிட்டேன். சேலத்திற்கு மாறுதல் ஆகி வருவதற்கு முன்பாக 35 நாள்களில் டீசல் கொள்முதல் செய்யப்பட்ட ரசீதுகளுக்கு நான் கையெழுத்திட்டிருக்கிறேன். அதைத்தவிர இந்த முறைகேட்டில் என் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டு இல்லை. இந்த விசாரணை இன்னும் முடிவடைவதற்கு முன், நான் ஓய்வு பெற உள்ளதால் என்னை பணியிடைநீக்கம் செய்திருக்கின்றனர்,'' என்றார்.
கடந்த திமுக ஆட்சியின்போது, ஓய்வு பெறும் நாளில் அரசு ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்படமாட்டாது என அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், அந்த ஆணைக்கு முரணாக, அதிமுக ஆட்சியில் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.