கடலூர் மாவட்டம் விருத்தாசலம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில், பெண்ணாடம் அருகில் உள்ள மாளிகை கூட்டம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 68). இவர் கணவர் இறந்த பிறகு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று மதியம் சுமார் 3 மணி அளவில் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த போது, சுமார் 35 வயது பெண் ஒருவர் ஜெயலட்சுமி வீட்டுக்கு வந்துள்ளார். அந்தப் பெண் ஜெயலட்சுமியிடம், பசிக்கிறது, ஏதாவது உணவு இருந்தால் கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.
ஜெயலட்சுமி வீட்டில் இருந்த சப்பாத்தியை தட்டில் எடுத்துக் கொண்டு திரும்பும் போது, அவரை பின் தொடர்ந்து வந்த அந்தப் பெண் திடீரென்று கத்தியைக் காட்டி ஜெயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் நகையைப் பறித்துக் கொண்டார். பிறகு வெளியே வந்த அந்தப் பெண் வீட்டின் வெளிப்புறமாகக் கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு செல்போனில் யாரிடமோ பேசிக்கொண்டு வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தார். ஜெயலட்சுமி தன் வீட்டின் பின்பக்கக் கதவைத் திறந்து வெளியே ஓடி வந்து, தன் நகையைத் திருடிக் கொண்டு ஓடுவதாகக் கூச்சலிட்டார்.
அருகில் இருந்தவர்கள் நடந்து சென்று கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பிடிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது ஒரு இளைஞர் இருசக்கர வாகனத்தில் வந்து அந்தப் பெண்ணை வண்டியில் உட்கார வைத்துக்கொண்டு தப்பிக்க முயன்றபோது, துரத்திச் சென்றவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து பெண்ணாடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட அந்தப் பெண்ணிடம் நடத்திய விசாரணையில், அவர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சிலம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவரை திட்டக்குடி அருகே திருமணம் செய்து கொடுத்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. கணவருடன் வாழாமல் தனது தந்தை வீட்டிலேயே வசித்து வந்த போது பெண்ணாடத்தைச் சேர்ந்த சேர்ந்த மெக்கானிக் உசேன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
தனியாக இருக்கும் பெண்களிடம் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் செல்லும் போது உசேனுக்கு போன் செய்து அவரை வரவழைத்து அவரது இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றது தெரியவந்தது. இருவரையும் நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைத்துள்ளனர். வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் முகம் தெரியாதவர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களை உள்ளே அனுமதிக்க கூடாது என்றும், அப்படிப்பட்டவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.