பாம்பு பிடிக்கும் போது தீயணைப்புத் துறை காவலரைப் பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குமராட்சி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மலர். இவர் வீட்டில் பாம்பு புகுந்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை வீரர் பாஸ்கர் (வயது 46) என்பவர் பாம்பு பிடிக்கச் சென்றுள்ளார். அதன்படி அவர் பாம்பைப் பிடித்து சாக்குப் பையில் போடும்போது அவரது கையில் பாம்பு கடித்து விட்டது. அதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து திருச்சி தீயணைப்புத்துறை துணை இயக்குநர் கா.குமார், மருத்துவமனைக்கு வந்து பாம்பு கடித்து சிகிச்சை பெறும் காவலரைப் பார்வையிட்டு நலம் விசாரித்தார். மேலும் மருத்துவரிடம் சிகிச்சை குறித்து விபரம் கேட்டறிந்தார். அப்போது மருத்துவர்களிடம் உயர் சிகிச்சை அளிக்குமாறு வலியுறுத்தினார்.