இரண்டு ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததால் அவர்கள் உளுந்தூர்பேட்டை கிளைச் சிறையில் இருந்து கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
உளுந்தூர்பேட்டை தாலுக்கா எலவனாசூர்கோட்டை காவல் நிலைய சரகம் எறையூர் கிராமத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு பெரிய கலவரம் ஏற்பட்டு துப்பாக்கிச் சூடு நடந்தது. இதனால் எறையூர் கிராமத்திற்கு கரும்புள்ளி கிராமம் எனப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் எறையூர் கிராமத்தில் தொடர் மணல் கொள்ளை, தடைசெய்யப்பட்ட கள்ளத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி வன விலங்குகளை வேட்டையாடுவது, கள்ளச்சாராயம் காய்ச்சுவது, ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரண்டு கோஷ்டிகள் அடிதடியில் ஈடுபடுவது போன்ற சமூக விரோதச் செயல்கள் நடந்து வருகின்றன.
இது சம்பந்தமாக எலவனாசூர்கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் எழிலரசி உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் பாலகிருஷ்ணன் மேற்கண்ட இரண்டு கோஷ்டிகள் மீதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து குற்றவாளி பட்டியலில் வைத்து காவல்துறையினர் கண்காணித்து வந்தனர்.
மேலும் இரு தரப்பினர் இடையே தொடர்ந்து பகை நீடித்ததால் பொதுமக்களின் அமைதி சீர்குலைந்து வருகிறது. இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கிரன் குரலா எறையூர் கிராமத்தைச் சேர்ந்த வி.எம்.ஆரோக்கியதாஸ் மகன் டேவிட் (எ) டேவிட்ராஜ் மற்றும் சாமுவேல் மகன் மெல்கியூர் (எ) ஜான் மெல்கியூர் ஆகிய இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் எழிலரசி மேற்கொண்ட 2 ரவுடிகளை குண்டர் தடுப்புச் சட்டத்திற்குக் கீழ் உளுந்தூர்பேட்டை கிளைச் சிறையில் இருந்தவர்கள் கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.