கடலூர் மாவட்டம் பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பரமேஸ்வரன் தலைமையில் போலீசார் நேற்று சென்னை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் ஒன்று தணிக்கையில் ஈடுபட்டு இருந்த போலீசார் அருகில் வந்து நிறுத்துவது போன்று காரின் வேகத்தை குறைத்து உடனடியாக காரை நிறுத்தாமல் சென்றுவிட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த காரை தொடர்ந்து சென்று போலீசார் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அந்த காரில் உள்ள ரகசிய இடத்திலிருந்த கேசில் 16 கிலோ கஞ்சா பொட்டலம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த இரண்டு பேரை பிடித்து பண்ருட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் திருச்சி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த மாதவன் (வயது 22) மற்றும் திருச்சியில் வசித்து வரும் இலங்கையைச் சேர்ந்த நதிஷ்குமார் (வயது 31) ஆகியோர் என்பதும், கஞ்சா கடத்த திருச்சி நகரில் காரை புக்கிங் செய்து சென்னைக்கு சென்று பூந்தமல்லி பகுதியிலிருந்து 16 கிலோ கஞ்சாவை வாங்கி கும்பகோணம் பகுதியில் உள்ள ஒருவரிடம் விற்கச் சென்றதும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்த பண்ருட்டி போலீசார், கஞ்சா பொட்டலங்களையும் காரையும் பறிமுதல் செய்ததுடன் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.