7 தமிழர்கள் விடுதலைக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதால் 161ஆவது பிரிவை பயன்படுத்துக என்று கூறுகிறார் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ். இது குறித்த அவரது அறிக்கை:
’’இராஜிவ் காந்தி கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்டு 28 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க குடியரசுத் தலைவர் மறுத்திருக்கிறார். தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான மத்திய அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் என்பதால் அதிர்ச்சியோ, ஏமாற்றமோ ஏற்படவில்லை. மாறாக, 7 தமிழர்களின் விடுதலைக்காக தமிழக அரசு இன்னும் கவனமாக செயல்பட வேண்டும்; தமிழர்கள் இன்னும் தீவிரமாக போராட வேண்டும் என்ற எண்ணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 7 தமிழர்கள் விடுதலை குறித்த விவகாரத்தில் மத்திய அரசு எப்போதுமே தமிழர்களின் மனநிலைக்கு எதிராகவே செயல்பட்டுவருகிறது. பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவுகளின்படி அவர்களை விடுதலை செய்வது பற்றி உரிய அரசு முடிவு செய்யலாம் என்றும் அறிவுரை வழங்கியது. அதனடிப்படையில் 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானித்த நிலையில், மன்மோகன்சிங் தலைமையிலான அப்போதைய மத்திய அரசு அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதன்பின்னர் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று 2014, 2016 ஆம் ஆண்டுகளில் இரு முறை மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்த போதும், அதை ஏற்க மத்திய ஆட்சியாளர்கள் மறுத்து விட்டனர்.
மற்றொருபுறம், இதுதொடர்பாக வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 7 தமிழர்கள் விடுதலை குறித்து 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடந்த ஜனவரி 23-ஆம் தேதி ஆணையிட்டது. அதன்மீது தான் மத்திய உள்துறை அமைச்சகம் இப்போது முடிவெடுத்து குடியரசுத் தலைவர் மூலமாக அறிவித்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், எத்தகைய சூழலிலும் 7 தமிழர்களும் விடுதலையாக முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு எந்த அளவுக்கு வன்மம் கொண்டிருக்கிறது என்பதையே இது அம்பலப்படுத்தியுள்ளது.
தண்டனைக் குறைப்பு தொடர்பான விஷயங்களில் 7 தமிழர்கள் விவகாரத்தையும், இந்தி திரைப்பட நடிகர் சஞ்சய்தத் விவகாரத்திலும் மத்திய அரசு எவ்வாறு மாறுபட்ட நிலைப்பாடுகளை மேற்கொண்டது என்பதிலிருந்தே இதை உணர்ந்து கொள்ள முடியும். 7 தமிழர்களை விடுதலை மத்திய அரசு மறுப்பதற்கு காரணம், அவர்கள் மத்திய சட்டத்தின் அடிப்படையில் மத்திய அமைப்பான சி.பி.ஐயால் வழக்குத் தொடரப்பட்டு தண்டிக்கப்பட்டவர்கள் என்பதால், அவர்கள் விடுதலை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தங்களுக்கு மட்டுமே உண்டு என்பதாகும். மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுதங்களை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட சஞ்சய்தத்தும் மத்திய அரசின் சட்டமான ஆயுதச் சட்டத்தின்படி சி.பி.ஐ. வழக்கில் தான் தண்டிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு தண்டனையில் 17 மாதங்கள் தண்டனைக் குறைப்பு செய்யப்பட்டு முன்கூட்டியே சஞ்சய்தத் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத மத்திய அரசு, 7 தமிழர் விடுதலையை மட்டும் எதிர்ப்பது ஏன்?
மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டுக்குப் பிறகாவது 7 தமிழர் விடுதலை தொடர்பான விவகாரத்தை இனிவரும் காலங்களில் எப்படி கையாள வேண்டும் என்பதை தமிழக ஆட்சியாளர்கள் தீர்மானிக்க வேண்டும். 7 தமிழர்களையும் விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசின் முன் இரு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. முதலாவது 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை சிறப்பாக நடத்தி, சாதகமான தீர்ப்பைப் பெறுவது, இரண்டாவது அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி ஆளுனருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 7 தமிழர்களையும் விடுதலை செய்வது ஆகும். நீதிமன்றத்தின் மூலமாக 7 தமிழர்களையும் விடுதலை செய்ய மத்திய அரசின் ஒப்புதல் அவசியம் என்பதாலும், மத்திய அரசு அதற்கு ஒப்புக்கொள்ளாது என்பதாலும் முதலாவது வாய்ப்பின்படி 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு.
எனவே, தமிழக அரசின் முன் உள்ள கடைசி வாய்ப்பு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி ஆளுனருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்துவது மட்டுமே. இதை உணர்ந்து உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி 161-ஆவது பிரிவின்படி 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்; அத்தீர்மானத்தை தமிழக ஆளுனருக்கு அனுப்பி அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதை தமிழக ஆட்சியாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.’’