கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட சி. கொத்தங்குடி ஊராட்சியில் 73 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி அன்றை தினம் தேசிய கொடியை ஏற்றாமல், சுதந்திர தினத்திற்கு முதல் நாள் இரவே தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர் என்றும் சுதந்திர தினத்தன்று ஊராட்சி அலுவலகத்தை திறக்காததை கண்டித்தும்.
கிராம சபை கூட்டத்தை கூட்டாமல் 100 நாள் வேலை செய்யும் பெண்களை மட்டும் வைத்து ஒருதலை பட்சமாக கூட்டம் நடந்ததாக போலியாக பதிவு செய்ததை கண்டித்தும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்வதற்கு ஒன்று கூடினர்.
அப்போது அந்த ஊராட்சியின் செயலாளர் தரப்பினருக்கும் போராட்டத்தில் ஈடுபட தயாரான தரப்பினரும் ஒருவருக்கொருவர் கட்டைகளால் தாக்கிக் கொள்ளும் சூழல் நிலவியது. அப்போது சரியான நேரத்தில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்ததால் பெரிய மோதல் சம்பவம் தடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ் குமார் காவல்துறையினர் உள்ளிட்டவர்கள் வந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
பின்னர் கிராமசபை கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் நடைபெற்றது. அதில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு குடிநீர் வசதி, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தீர்மானமாக பதிவு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.