கடலூர் மாவட்டம் நெய்வேலியிலுள்ள என்.எல்.சி. நிறுவனத்தில் முதன் முதலாக தொடங்கப்பட்ட முதலாவது அனல்மின் நிலையத்தில் 50 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மின்சாரம் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்த மின்நிலையம் 50 வருடங்களுக்கு மேல் செயல்பட்டு கொண்டிருப்பதால், வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் மூடப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதேசமயம் அந்த மின்நிலையத்தில் உள்ள நான்காவது அலகில் சாம்பலைப் பிரித்தெடுக்கும் சல்லடை இயந்திரம், வலுவற்ற கட்டுமானத்தில் இருப்பதை அறிந்த என்.எல்.சி. நிர்வாகம் அப்பகுதியில் உள்ள அனைத்துப் பணிகளையும் முற்றிலுமாக நிறுத்தி வைத்ததுடன், அப்பகுதியில் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளது. இந்நிலையில் நேற்று (14/05/2020) சாம்பல் சல்லடை இயந்திரம் சரிந்து விழுந்தது. ஆனால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
என்.எல்.சி. நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் செயல்பட்டதன் காரணமாகச் சாம்பல் சல்லடை இயந்திரம் சரிந்து விழுந்தும் தொழிலாளர்களுக்கோ, மற்றும் இதர பாதிப்புகளோ எதுவும் இல்லை என்று என்.எல்.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த மே 4- ஆம் தேதி கன்வேயர் பெல்ட் எரிந்தது, மே 7- ஆம் தேதி இரண்டாவது அணு மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 4 பேர் உயிரிழந்தது என இரண்டு வாரத்தில் அடுத்தடுத்து 3 விபத்துகள் ஏற்பட்டதால் தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.