கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள மன்னம்பாடியில் உள்ள ஏரியில் மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற கிராம மக்கள் காவல்துறையினரைக் கண்டதும் தெறித்து ஓடினர்.
மன்னம்பாடி கிராமத்தில் உள்ள ஏரியில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் மன்னம்பாடி, இடையூர், படுகளாநத்தம், விளாங்காட்டூர் உள்ளிட்ட 10 கிராம மக்கள் பங்கேற்று ஒரே நேரத்தில் மீன் பிடிப்பது வழக்கம். இந்த நிலையில் இன்று (06/06/2021) காலை முழு ஊரடங்கு உத்தரவைமக் கண்டு கொள்ளாமல் பல்வேறு கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் ஏரியில் ஒன்றுகூடி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் காவல்துறையினர், ஏரி பகுதிக்கு வேனில் வரவே, ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஆண்கள், இளைஞர்கள் நான்கு புறமும் தெறித்து ஓடினர்.
கரோனா இரண்டாவது அலையில் கிராமப்புறங்களில் தொற்று அதிகரித்து, உயிரிழப்புகள் நிகழ்ந்து வரும் நிலையில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஏரியில் மீன் பிடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.