கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் "அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு, அதிரடி விலையேற்றம். கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்." என்ற தலைப்பில் கடந்த 15- ந்தேதி நக்கீரன் இணையத்தில் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு குறித்தும், ஊரடங்கு உத்தரவைப் பயன்படுத்தி சில வியாபாரிகள் அதிக விலைக்கு மளிகைப் பொருட்களை விற்பனை செய்வதைச் சுட்டிக்காட்டி படத்துடன் செய்திப் பதிவு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இந்தச் செய்தியைப் பொதுமக்கள் அனைவரும் வரவேற்று இது உண்மை தான் எனக்கூறி செய்தியைப் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். மேலும் சிதம்பரத்திலுள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள கரோனா சிறப்பு வார்டை ஆய்வு செய்ய வந்த மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வனிடம் இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மளிகைப் பொருட்களை அதிக விலைக்கு விற்கும் கடைகளை ஆய்வு செய்ய அந்தந்த பகுதியில் உள்ள வட்டாட்சியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ் மற்றும் காவல்துறையினர் சிதம்பரம் பகுதியில் உள்ள மளிகை மொத்த விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ், "சில மொத்த விற்பனையாளர் கடைகளில் ஆய்வு மேற்கொண்டபோது ஒவ்வொரு பொருளுக்கும் ரூ10 முதல் ரூ15 வரை விலை ஏற்றப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் சில கடைகளை ஆய்வு செய்ய வேண்டும். அனைத்தையும் ஆய்வு செய்து இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார்.