மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 65 வயது முதியவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள கீழ்பாதி அம்மன் கோயிலை சேர்ந்தவர் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி. அதே தெருவை சேர்ந்தவர் 65 வயதான ராமச்சந்திரன். சிறுமியின் பாட்டி உடல் நலக்குறைவு காரணமாக புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15.8.2018 அன்று சிறுமியின் பெற்றோர் அவரை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தனர்.
இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டில் தனியாக இருந்ததை தெரிந்துகொண்ட ராமச்சந்திரன் அங்கு சென்று சிறுமியை வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்றார். அதனைப் பார்த்துக் கொண்டிருந்த எதிர்வீட்டுக்காரர் ஒருவர் நீண்ட நேரம் ஆகியும் ராமச்சந்திரன் கீழே வராததால் சந்தேகமடைந்து மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது முதியவர் ராமச்சந்திரன் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் தொல்லை கொடுப்பதை கண்டுள்ளார். உடனடியாக அந்த சிறுமியை மீட்ட எதிர் வீட்டுக்காரர் முதியவரை அடித்து விரட்டினார்.
இந்நிலையில் வீடு திரும்பிய சிறுமியின் பெற்றோருக்கு இந்த சம்பவம் தெரிய வர, அவர்கள் மந்தாரக்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதையடுத்து போலீசார் ராமச்சந்திரனை கைது செய்து, கடலூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு சிறப்பு வழக்கறிஞர் செல்வப்பிரியா பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் வாதாடினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, முதியவர் ராமச்சந்திரனுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.