சிதம்பரம் பகுதியில் 369 வீடுகள் இடித்து இரண்டு வருடங்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரை நேரில் சந்தித்து பாதிக்கப்பட்ட மக்கள் மனு அளித்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரத்திற்கு அருகே உள்ள பூதகேணி மற்றும் தில்லை அம்மன் கோவில் தெரு, வாகீச நகர், கோவிந்தசாமி தெரு, அம்பேத்கர் நகர், குமரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்த 369 குடியிருப்பு வீடுகளை வாய்கால் நீர்நிலை ஆக்கிரமிப்பு என கூறி கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது.
இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதன் பேரில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சார் ஆட்சியர் விசுமகாஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வீட்டுமனை ஒதுக்கீட்டிற்கான டோக்கன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.
ஆனால் அதற்கான இடங்கள் இதுவரை ஒதுக்கித் தரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் சிதம்பரம் சார் ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுத்தனர். அதைத் தொடர்ந்து சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியனை சந்தித்த மக்கள் இந்த விவகாரம் தொடர்பாக எடுத்துக் கூறி கோரிக்கை மனுவை வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர், இது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று விரைவில் நடவடிக்கை எடுப்பதாக மக்களிடம் உறுதியளித்தார்.