கடலூர் மாவட்டம் சிதம்பரம் நந்தனார் பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் அருகில் உள்ள குளத்தில் மீன்கள் செத்து மிதந்தது. கடந்த ஆறு நாட்களாகியும் அதனை அப்புறப்படுத்தவில்லை. இதனால் செத்த மீன்களில் புழுக்கள் பிடித்து துர்நாற்றம் வீசியது. அருகில் இருக்கும் பள்ளி மாணவிகளுக்கும் அரசு அதிகாரிகள் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கும் அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கும் இந்த துர்நாற்றம் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது.
இதனால் அந்த வழியாக செல்பவர்கள் முகத்தில் துணியை கட்டியவாறு சென்று வந்தனர். இதுகுறித்து நகராட்சி ஆணையருக்கு செய்தியாளர்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவரும் குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த 10 துப்புறவு ஊழியர்களை உடனே அனுப்பிவைத்தார்.
ஊழியர்களும் செத்தமீன்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது குளத்தை குத்தகையெடுத்த ஒப்பந்ததாரர் என்று சிலர் வந்து குளத்தை சுத்தப்படுத்தும் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து கத்தியால் வெட்டியுள்ளனர்.
கத்தியால் வெட்டியதில் அறிவரசன் உள்ளிட்ட மூன்று துப்புறவு ஊழியர்களுக்கு தலை, கைகளில் வெட்டுவிழுந்துள்ளது. மற்றுவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கத்தி வெட்டில் காயம் அடைந்தவர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து சிதம்பரம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் பணிபாதுகாப்பு இல்லையென்று சிதம்பரம் நகராட்சி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.