நாடாளுமன்றத் தேர்தல் அன்று சிதம்பரம் தொகுதி, அரியலூர் அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தில் இரு தரப்பு மக்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
அதையடுத்து மற்றொரு சமூகத்தை பற்றி ஆபாசமாகவும், சமூக அமைதியை குலைக்கும் வகையிலும் சிலர் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதையடுத்து இரு தரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் அமைதியை குலைக்கும் வகையில் வீடியோக்கள் வெளியிடும் சமூக விரோதிகள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் பொது அமைதியை குலைக்கும் வீடியோக்கள் வெளியிடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் வாட்ஸ்அப் மூலம் செய்திகள், வீடியோக்களை பரப்புபவர்கள்மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்துள்ளார். மேலும் பொதுமக்கள் இதுபோன்ற செய்திகள், வீடியோக்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம்" எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.