கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் மாணவிகள் தலைமை ஆசிரியரை கண்டித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் சம்பந்தக்கார தெருவில் நகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 100 மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக எழிலரசி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு பெற்றோர்களுடன் வந்த மாணவிகள் வகுப்பறைக்கு செல்லாமல் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் நகர காவல்துறை ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவிகள் பள்ளி தலைமையாசிரியர் தேவையற்று திட்டுகிறார் என்றும், கழிவறையை சுத்தம் செய்ய சொல்கிறார் என்றும் கூறினார்கள்.
மேலும், அவர் மதிய உணவு எடுத்து வரவில்லை என்றால் பள்ளியிலேயே சமைத்து தருமாறு கட்டாயப்படுத்துகிறார். எனவே அவரை பணி மாறுதல் செய்ய வேண்டும் என்றனர். இதனையடுத்து போலீஸார் பள்ளி தலைமையாசிரியரை பணி மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தன் பேரில் போராட்டத்தை மாணவிகள் கைவிட்டு வகுப்பறைக்கு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.