கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் வட்டத்தில் குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மெய்யாத்தூர் கிராமத்தில் தமிழக அரசின் விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள சில பயனாளிகளை தவிர்த்துவிட்டு, கடந்த ஆண்டு ஆடுகள் பெற்றவர்கள் மற்றும் தகுதியற்றவர்களை தேர்வு செய்ததால் பாதிக்கப்பட்ட கிராம பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேன்மொழி தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் மாவட்ட குழு கற்பனை செல்வம், ஒன்றிய செயலாளர் மூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மாசிலாமணி, மணிவண்ணன் உள்ளிட்ட பொதுமக்கள் சிதம்பரம் - காட்டுமன்னார்கோவில் தேசிய நெடுஞ்சாலை குமராட்சி கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து காவல்துறையினர் மற்றும் ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் போராட்டம் தற்காலிகமாக விலக்கிகொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தேர்வு செய்யப்பட்ட பயனாளி தேர்வு பட்டியலை மறு ஆய்வு செய்து தகுதியுள்ள நபர்களை இணைத்து ஆடுகள் வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனை அனைவரும் ஏற்றுக்கொண்டு கலைந்து சென்றனர்.