
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் அரக்கோணம் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ திருத்தணி தூய மத்தேயு ஆலயத்தில் இதனைச் சார்ந்த 17 சர்ச்சுகளில் நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுவதற்கு அறிவிப்பு செய்யப்பட்டு 16 சர்ச்சுகளில் தேர்தல் முடிவுற்றது. இந்த 17 சர்ச்சுகளின் முதன்மை ஆலயமான சி.எஸ்.ஐ தூய மத்தேயு ஆலயத்தில் நிர்வாகிகள் ஏக மனதாகத் தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது வழக்கறிஞர் இளவரசன் மற்றும் இந்த ஆலயத்தின் உறுப்பினர்கள், பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு, ஆலயத்தில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடைபெறுகிறது. திருத்தணி நகரத்தில் உள்ள அமிர்தாபுரம் சர்ச்சில் இன்னும் தேர்தல் முடியவில்லை. அதற்குள் ஒருமனதாகத் தலைமை ஆலயத்தில் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

மேலும் ஆலயத்தின் ஆயர் பெஞ்சமின் கார்த்திகேயன் அவர்கள் முறைகேடாக ஒரு லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டு ஒரு தலை பட்சமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினர். தொடர்ந்து ஆலயத்திற்கு முன்பு அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி டி.எஸ்.பி விக்னேஷ் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஆலயத்தின் தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று கூறி போராட்டக்காரர்கள் பேச்சு வார்த்தையை புறக்கணித்துவிட்டனர்.
இதையடுத்து ஆலயத்தின் நிர்வாகிகளுக்கு திருத்தணி போலீஸாரும், காவல் ஆய்வாளரும் துணை போவதாகப் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். இவர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆலயத்தில் புதிய நிர்வாகிகள், செயலாளர், பொருளாளர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் சி.எஸ்.ஐ ஆலயத்தின் முன்பு போலீஸாருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் போலீசார் குவிக்கப்பட்டனர். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.